தமிழ் தலைவர்களே இதுதான் உங்களின் ஆட்பலமா?

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தமிழ் கட்சிகள் உண்ணா விரதப் போராட்டம் ஒன்றை நடாத்த தீர்மானித்திருந்தன. அதற்கான உண்ணா விரதப் போராட்டம் இன்று சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு தறப்பாளும் நாலு தலைவர்களுமாக தொடங்கப்பட்ட இந்த உண்ணா விரதப் போராட்டம், நினைவேந்தலுக்கு விடுக்கப்பட்ட தடையைவிடவும் திலீபனை அவமதிப்பதாகவே தோன்றுகின்றது.

அண்மையில் இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் நடந்து தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தமிழ் தலைவர்களும் மக்களின் எச்சரிக்கையுடேயே தெரிவு செய்யப்பட்டதாவே தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. கடந்த காலத்தில் மக்கள் வெகுசனப் போராட்டங்களை சரியாக தலைமை தாங்காமை, வெறும் வாய்ப்பேச்சு பேசிக் கொண்டிருந்தமை, தனிப்பட்ட பதவிகளை காப்பாற்ற முனைந்தமைக்காகவே மக்கள் தேர்தலில் வாக்குகளால் பாடங்களைப் புகட்டியிருந்தனர்.

எனினும் அந்தப் பாடங்களை எமது தமிழ் தலைவர்கள் ஏற்றுக் கொண்டதைப் போல தெரியவில்லை. இன்றைய போராட்டத்தில் முகங்கள் தெரியக்கூடிய வகையில் முகக் கவசங்களை அணிந்துள்ள எமது தலைவர்கள், நட்சத்திர நடிகர்களைப் போல வெகுசிலர் மாத்திரமே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதையும் ஒரு அரசியலுக்கான முதலீடாகவும் பிரபலம் தேடும் உபாயமாகவும் எமது தலைவர்கள் பயன்படுத்திக் கொள்ளுகின்றனரே தவிர, ஒரு போராட்டமாக அல்ல.

உண்மையில் இன்றைய நாளை தமிழ் தலைவர்கள், சிறந்தவொரு மக்கள் திரள்மிக்க வெகுசனப் போராட்டமாக மாற்றியிருக்க வேண்டும். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று பேசிய திலீபனுக்கு அதுவே மிகச் சிறந்த அஞ்சலியாக இருக்கும். திலீபன் வலியுறுத்தியது மக்கள் புரட்சியே தவிர, அரசியல்வாதிகளின் பிரபலம் தேடுகின்ற நாடகப் புரட்சியல்ல. இந்த நாடகப் புரட்சி இன்னும் சில மணித்தியாலங்களில் முடிந்துபோகும். தமிழ் கட்சிகளின் கூட்டும் திலீபனின் நினைவு நாட்களுடன் தகர்ந்துபோய்விடும்.

ஆனால் மக்களை அழைத்து, மக்களுக்கு அரணாக நின்று திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தால், மக்கள் மத்தியில் எழுகின்ற புரட்சி திலீபன் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக் கூடியதாக இருந்திருக்கும். அதுவே அவருக்கான நிகரற்ற அஞ்சலியாக இருந்திருக்கும். உண்ணா விரதப் போராட்டத்தில் அரசியல் தலைவர்கள் செய்கின்ற நாடகங்களை இலங்கை மக்கள் மாத்திரமல்ல, இந்திய மக்களும்,  ஏன் உலக மக்களும் கூட நன்றாக அறிந்தே உள்ளனர். எனவே தலைவர்களின் உண்ணா விரத நாடகங்கள் ஒருபோதும் மக்களின் விடிவுக்கான உண்மையான போராட்டங்கள் அல்ல.  

கடந்த காலத்தில் தேர்தலின் போது, தமிழ் தலைவர்கள் தமது செல்வாக்கை வெளிப்படுத்த, பேருந்துகளை விட்டு ஆட்களை ஏற்றி இறக்கினார்கள். தேர்தல் காலத்தில் தம்மை சூழ தொண்டர்களை காட்டி மக்களின் வாக்குகளை அள்ள முனைந்தார்கள். தமது அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்த, ஆகாரம் கொடுத்து, தொண்டர்களை வைத்திருந்தவர்கள், இன்று மாத்திரம் ஏன் இப்போராட்டத்திற்கு அவர்களை அழைத்துவரவில்லை? 

ஒரு அரசியல் தலைவர், நூறு பேரை அழைத்து வந்திருந்தால், இன்றைய போராட்டம் மக்கள் நிறைந்த போராட்டமாக மாறியிருக்குமல்லவா? உண்மையில் திலீபன் போன்ற தியாகிகளை நினைவு கூருகின்ற போராட்டத்தில், அரசியல் தலைவர்களின் முகங்கள் மறைந்து மக்களின் முகங்கள்தானே தென்பட வேண்டும். இது முகங்களை காட்டி பிரபலமும் அரசியல் ஆதாயமும் தேடும் இடமில்லை என்பதை சில அரசியல்வாதிகள் துயிலும் இல்லங்களில் நாடகங்களை அரங்கேற்ற முயன்றபோது மக்கள் எடுத்துரைத்தனரல்லவா?

இன்றைக்கு சனிக்கிழமை. ஒரு விடுமுறை நாள். இன்றைய நாளில் பல ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி, நினைவேந்தல் செய்கின்ற உரிமையை வலியுறுத்துகின்ற மக்களின் வெகுசனப் போராட்டமாக காட்டியிருந்தால், இலங்கை அரசை அது பணிய வைத்திருக்கும். சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கும். அத்தகைய போராட்டத்தை நடத்தாமல், திலீபனின் நினைவேந்தலை குறுகிய எல்லைக்குள் முடக்கியது தமிழ் கட்சிகள் திலீபனுக்கும் மக்களுக்கும் செய்கின்ற பெரும் துரோகமே.

அரசாங்கம் நினைவேந்தலுக்கு அனுமதி மறுத்த உரிமை மறுப்பைக் காட்டிலும் இதுவே பெருந்துரோகம் ஆகும். தமிழ் கட்சிகள் தமது கடமையை உணராமல், அந்தக் கடமையை செய்யத் தவறுவதால் ஏற்படும் ஆபத்தை உணராமல் இன்னமும் இருப்பதுதான் பெரும் அபாயமும் ஆபத்துக்கொண்டது. இப்படி உள்ளவர்கள் தொடர்ந்தும் மக்கள் பிரதிநிதியாக இருந்தால், அது ஈழத் தமிழ் இனத்தை பெரும்குழியில் தள்ளும். இன்றைய தியாக தீபம் திலீபனின் நினைவு நாளில் இந்த உண்மை மீண்டும் வெளிச்சமாகியுள்ளது.

தியாக தீபம் திலீபன் அவர்கள், மக்களின் எழுச்சிமீது உறுதியாக நம்பிக்கை கொண்டே தன்னை உருக்கும் போராட்டத்தில் இறங்கினார். இப்போதும் திலீபனின் நம்பிக்கையாக எஞ்சி இருப்பதும் மக்களின் எழுச்சியே. மக்கள் அறிவாற்றல் கொண்டு, தமது அரசியல் தலைவர்கள் தொடர்பில் கொள்ளுகின்ற விழிப்புத்தான் எதிர்காலத்தை மாற்றியமைக்கக்கூடியது. எழுச்சியை ஏற்படுத்தும் தன்னலமற்ற, உண்மையான இனப்பற்றுக் கொண்ட உறுதி மிக்க தலைமைத்துவத்தை மக்கள் ஏற்படுத்துவதே திலீபனுக்கான உண்மையான அஞ்சலியாகும்.

ஆசிரியர் பீடம் – தமிழ் குரல்

26.09.2020