தமிழ் தேசிய அரசியலில் மெத்தப் படித்தவராகவும் மற்றவர்களை முட்டாளாகவும் கருதும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்களுக்கு!
நாய்க்கு எங்கு அடித்தாலும் காலைத் தூக்கும் என்பதைப் போல எப்போது பார்த்தாலும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகவும் அதன் தலைமைக்கு எதிராகவும் அற்ப்பத்தனமாக பேசி, தென்னிலங்கையை திருப்திப்படுத்தி, எம் மக்களை காயப்படுத்தி உங்கள் வழக்கு வியாபாரத்தை கச்சிதமாக செய்து வரும் சுமந்திரன் அவர்களே, புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு தேர்தலில் வெல்ல உங்களால் முடியுமா?
2009ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், 2010 பொதுதேர்தலில் தமிழ் மக்களும் புலிப் போராளிகளும் சிந்திய இரத்தத்தையும் செய்த தியாகங்களையும் வைத்துத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதன் வழியாகவே உங்களுக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் கிடைத்தது. தமிழர்களின் போராட்டமும் புலிகளின் தியாகமும் போட்ட பிச்சையே உங்கள் பதவி.
புலிகளின் ஆயுத மற்றும் அரசியல் போராட்ட இலக்கு என்பது தமிழர்களின் இலக்கும் விருப்பும். அதன் வழியாகவே கூட்டமைப்பும் அதன் பதவிகளும் உருவாக்கப்ட்டன. அப்படியென்றால் ஏன் 2010இல் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றீர்கள்? தமிழர்களின் இலட்சியத்திலும் போராட்டத்திலும் உடன்பாடு இல்லை என்றால் சுவாமிநாதனைப் போலவும் லக்ஸ்மன் கதிர்காமரைப் போலவும் அரசில் இணைந்து பதவியை பெற்றிருக்கலாமே?
மேட்டுக்குடி தமிழர்களை தவிர வேறு யாரும் அறியாத உங்களால் 2010இல் ஏதேனும் ஒரு கட்சியில் போட்டியிட்டு எத்தனை வாக்குகளை பெற்றிருப்பீர்கள்?
தமிழர்களின் வலிகளையும் போராளிகளின் ஒப்பற்ற தியாகங்களையும் சில சிங்களத் தலைவர்களே உணர்ந்து அதனை பெரும் மரியாதையுடன் அணுகி வருகின்ற நிலையில், நீங்கள் உங்கள் தனிப்பட்ட நன்மைகளுக்காகவே சிங்களவர்களுடன் வாழ்வது அதிஷ்டம் என்று தென்னிலங்கையை திருப்திப்படுத்த முனைகிறீர்கள். நீங்கள் பொறுப்பு வகிக்கும் தென்னிந்திய திருச்சபை பதவிக்காகவும் வழக்கு வாடிக்கையாளர்களாக அதிகமாக சிங்களவர்களை கொண்டிருப்பதனாலுமே இப்படிச் சொல்கிறீர்கள்?
அதைப்போலவே அண்மையில் முஸ்லீம்களின் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றில் நீங்கள் ஆஜராகி இருந்தீர்கள். அத்துடன் போர்க்காலத்தில் முஸ்லீம் மக்களின் பாதுகாப்புக்காக அவர்களை அனுப்பியதை இனச் சுத்திகரிப்பு என்று பேசியதும் முஸ்லீம் மக்களின் வழக்கு வாடிக்கைகளைப் பெற்று உங்களது வியாபாரத்தை மேம்படுத்தவே. உங்கள் வியபாரத்தின் பிரசித்திக்காகவும் மேம்பாட்டிற்காகவுமே விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்குகளில் முன்னிலையாகவில்லை. அதனையும் நீங்களே உங்கள் வாயால் அண்மைய நேர்காணலில் கூறியுள்ளீர்கள்.
உங்களைத் தவிர அனைவரும் முட்டாள் எனக் கருதுகின்ற எகத்தாளத்தை எம் தாயகம் ஒருபோதும் ஏற்காது. கடந்த தேர்தலில்கூட புலிகள் பற்றியும் அதன் தலைமை பற்றியும் புத்திசாதுரியமான முறையில் பேசி தேர்தலில் பயன்படுத்திவிட்டு, (அதனால்தான் 58ஆயிரம் வாக்குகளை பெற்றீர்கள்) இப்போது புலிகளின் தியாகங்களை சொல்லி வாக்கு கேட்க மாட்டேன் என்று மிக உன்னத தியாகங்களைப் புரிந்த ஒரு போராட்டத்தை அமைப்பை கொச்சைப்படுத்த மனம் கூசவில்லையா?
நீங்கள் விடுதலைப் புலிகளையோ அல்லது அதன் தலைவரையோ ஏற்காமல் இருப்பது எங்களுக்கு ஒருபோதும் பிரச்சினையல்ல. பல துரோகிகளையும் எதிரிகளையும் கடந்தே தமிழர் போராட்டம் தளைத்து வந்தது. ஆனால் புலிகளின் தியாகத்தால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில் நீங்கள் பதவிகளை பெறுவதே எம் மக்களால் ஏற்க முடியாதது. அப்படி பதவிகளைப் பெற்றுக் கொண்டு இப்படி பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை தமிழ் மக்களின் தலைமையாகவும், விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும் ஏற்று, தமிழ்த் தேசிய இனத்தின் சார்பிலான விடுதலைப்புலிகளின் போராட்ட இலட்சியத்திற்கு நேர்மையாகவும் உறுதியாகவும் முழு ஒத்துழைப்பை நல்குவோம்.” என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2004 தேர்தல் விஞ்ஞானபத்தில் குறிப்பிட்டிருந்ததை அறியாமல்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதவியை பெற்றீர்களா? அல்லது தெரிந்தும் வசதியாக மறந்து அல்லது மறைத்துக் கொண்டீர்களா?
நீங்கள் தமிழ் தேசிய அரசியலில் இருக்க தகுதியற்றவர் என்பது உங்கள் கருத்துகளால் உணர்த்தப்படும் உங்களது நிலைப்பாடு. எனவே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் உள்ள கட்சியில் நீங்கள் இருக்க முடியாது என்பதும் உங்களின் கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளின் முடிவு. எனவே அதிலிருந்து விலகி நீங்கள் அதிஷ்டமாக கருதும் தென்னிலங்கையிலோ அல்லது ஜே.வி.பி போன்ற உங்கள் தோழமையான தென்னிலங்கை கட்சியிலோ தேர்தலில் போட்டியிடுங்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சி உள்ளவரை அது தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் விளைவாகவும் அதன் தியாகத்தில் பிறந்த அமைப்பாகவுமே இருக்கும். தங்கள் கொள்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் மாறான அமைப்பில் இருந்து தாங்கள் பதவிகளைப் பெறுவது தாங்கள் கூறும் நேர்மைக்கும் சான்றல்ல. எனவே தனிக்கட்சியிலோ, வேறு கட்சியிலோ போட்டியிட்டு வென்றுகாட்டுங்கள்.
ஆனாலும் ஒன்றை நினைவுபடுத்தி இம் மடலை நிறைவு செய்கிறோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பையோ, தமிழரசுக் கட்சியையோ விட்டு வேறு கட்சியில் நீங்கள் போட்டியிட்டால், அங்கஜன் இராமநாதன் பெற்ற வாக்குகளைக்கூட உங்களால் பெற முடியாது என்பதையும் சுட்டிக்காட்டி, தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஊடகம் என்ற வகையில் உங்களுக்கு பகிரங்கமாக இச் சவாலை விடுக்கிறோம்.
தமிழ்க்குரல் ஆசிரிய பீடம்.
15.05.2020