முள்ளிவாய்க்காலுக்கு நேர்மையாக இருக்கிறோமா?

mullivaikal nermai scaled
mullivaikal nermai scaled

மே மாதம், ஈழத் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்பட்ட காலம். ஈழத்து வானில் இனப்படுகொலையின் நினைவுகள் மிதக்கும் துயரக்காலம். எம் மண்ணில் குருதி கசியும் காலம். எங்கள் நிலத்தின் பூக்கள் எல்லாம் சிவந்து போயிருக்கும் காலம். இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலை அரங்கேற்றப்பட்ட காலம்.

இப்போது ஈழத் தமிழ் மக்களிடம் நினைவுகள் மாத்திரமே உள்ளன. போராளிகளைப் பற்றிய நினைவுகள். போராளிகளின் காலத்தில் தமிழர் நிலம் எப்படி இருந்தது என்ற நினைவுகள். ஒரு பெரும் மலையில் ஒப்பற்ற விடுதலைப் போராட்டத்தை தள்ளி ஏற்றி மக்கள் மகிழ்ந்திருந்த நினைவுகள். அந்த நினைவுகளே இன்றைய அமைதி. அந்த நினைவுகளே இன்றைய ஆயுதம். அந்த நினைவுகளே பெரும் வழித்தடம்.

போர் முடிவடைந்து பதினொரு ஆண்டுகள் ஆகின்றன. விடுதலைப் புலிகள் இல்லாத ஈழ நிலம் அரசியல் சதிகளால் சிதறுண்டு இருக்கின்றது. குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போல தமிழ் அரசியல்வாதிகளின் கையில் ஈழ அரசியல் சிக்கி தவிக்கிறது. மலையில் ஏற்றப்பட்ட தமிழர் போராட்டத்தை பாதாளத்தில் தள்ளுகிறது இன்றைய தமிழ் அரசியல்.

முள்ளிவாய்க்காலை வெறுமனே ஒரு சடங்காக நினைவு கூறுவதுதான் எமது நோக்கமா? முள்ளிவாய்க்காலுக்கு நேர்மையாக இருந்து அஞ்சலியை செலுத்துகிறோமா? ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. ஒவ்வொருவரும் நம்மை நாமே விசாரணை செய்து கொள்ள வேண்டிய வேளை இது.

தமிழர் நிலம் என்பது வெறும் கட்சி அரசியலுக்கான நிலமல்ல. அது விடுதலை வேண்டி ஒரு இனம் மாபெரும் உன்னத விடுதலைப் போராட்டத்தை நடாத்திய நிலம். இந்த நிலத்தில் வாழ்வது என்பது அந்த ஒழுக்கத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். சீரிய கட்டமைப்புக்களாலும் வளர்ச்சியினாலும் அறியப்பட்ட நிலத்தின் சிக்கலுக்கு என்ன காரணம்? தவறானவர்களின் கையில் போய்விட்டதா?

இன்று நமக்கு முன்னால் உள்ள மிகப் பெரிய தேவை என்ன? தலைகளில் குண்டுகளின் துகள்களை சுமந்து பெரும் கொதிப்புடன் குழந்தைகள் வாழ்கின்றனர். கண்களின்றி, கைகளின்றி, குறிகளின்றி வாழும் பிள்ளைகளின் நிலத்தில் அவர்களுக்காக நீதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமல்லவா?

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை மாத்திரமல்ல, முள்ளிவாய்க்காலின் துயரத்தையும் அரசியல் முதலீடாகவே நம் அரசியல்வாதிகள் பாவிக்கிறார்கள். அவர்களுக்கு இது தொழில். அந்த தொழிலுக்கு ஏற்ப, தொழில் சந்தைக்கு ஏற்ப மாறி மாறி பேசுகிறார்கள். தேவை ஏற்பட்டால் ஒன்றை பேசுவார்கள். தேவை ஏற்பட்டால் மௌனமாக இருப்பார்கள்.

அண்மையில் அரசியல் பிரமுகர் ஒருவர் விடுதலைப் போராளிகள் குறித்து பேசிய சர்ச்சையான பேச்சு அனைவரும் அறிந்தது. தமிழ் மக்களின் மனங்களை காயப்படுத்துகிற அந்தப் பேச்சை அவர் பேசியுள்ளார். இந்த முள்ளிவாய்க்கால் காலத்தில், அதன் அவலத்தில் விளைந்த அரசியல் பதவியிலிருந்து தமிழ் மக்களுக்கு அவர் செய்த சிறந்த நன்மை அதுதான்.

அதாவது போரின் காயங்கள் ஆறாத மக்களின் மனங்களை இன்னொருமுறை காயப்படுத்தியதே அந்த கருத்து. சூழ்ச்சிகளும் உள்நோக்கங்களும் கொண்ட அந்தக் கருத்து சிங்களப் பேரினவாதிகளை திருப்திப்படுத்துவதை மாத்திரமே இலக்காக கொண்டது. இவரும் இவரைப் போன்றவர்களும்கூட முள்ளிவாய்க்காலுக்கு அஞ்சலி செலுத்தினால் கொல்லப்பட்டவர்கள் ஆத்மா சாந்தி பெறுமா?

வெறுமனே தீபங்களை ஏற்றி, புகைப்படங்களுக்கு முகம் காட்டுவதல்ல நினைவேந்தல். அப்படி செய்துவிட்டு அதைக்காட்டி தேர்தலில் வாக்கு கேட்பதல்ல முள்ளிவாய்க்காலுக்கான நேர்மை.

மக்களுக்கும் வரலாற்றுக்கும் போராட்டத்திற்கும் உண்மையாக இருப்பவர்கள், உண்மையான துயரத்துடன் அஞ்சலி செலுத்துவதே பொருத்தமானதாக இருக்கும். முள்ளிவாய்க்காலுக்கு நேர்மையாக இருப்பவர்களின் அஞ்சலிதான் தமிழ் மக்களின் நிலையை மாற்றும்.

முள்ளிவாய்க்காலுக்கு நேர்மையாக இருக்கிறோமா என்பதை ஒவ்வொரு தமிழரும் சுயவிசாரணை செய்தபடி இன அழிப்பு போரில் கொடுமையாக அழிக்கப்பட்ட எம் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோமாக…

தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்

17.05.2020