தமிழர்கள் ஸ்ரீலங்கன் இல்லை; முள்ளிவாய்க்கால் சொல்லும் சேதி: கவிஞர் தீபச்செல்வன்

theepachelvan
theepachelvan

நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற என்னுடைய கவிதை ஒன்றுக்கு தொடர்ச்சியாக புலி எதிர்ப்பாளர்களிடமிருந்து கவிதையை எதிர்கொள்ள முடியாத காழ்ப்புணர்வு வந்து கொண்டே இருக்கிறது. அக் கவிதை பெரும்பாலும் மாவீரர் தினம், மே – இன அழிப்பு நினைவுநாள், இலங்கை சுதந்திர தினம் முதலிய நாட்களில் ஏராளமான தமிழ் இளையவர்களால் அதிகம் பகிரப்படுகிறது. ‘நீ ஸ்ரீலங்கன் இல்லை என்றால் எதற்காக ஆசிரியர் உத்தியோகம் செய்கிறாய்?’ என்பது தொடங்கி, ‘எந்த நாட்டின் அடையாள அட்டையை பயன்படுத்துகிறாய்’ என்பது வரை கேள்விகள் நீளும். அந்தக் கவிதையே யாவற்றுக்குமான பதிலை சொல்லி விடுகிறது.

அண்மைய காலத்தில், கொரோனா பேரிடர் காலத்தில் சிங்கள இராணுவத்தை வைத்து அரசு செய்கிற அரசியலையும் வடக்கு கிழக்கில் அதனால் ஏற்படுகிற அச்சுறுத்தலையும் பற்றி ‘உரிமை’யில் எழுதிய போதும்கூட சிலர் இதிலும் இராணுவத்தை எதிர்க்கக்கூடாது என்று அறிவுரைத்தார்கள். சவேந்திர சில்வாவை கொரோனா தடுப்பு தலைவராக நியமித்தது முதல், கொரோனா தடுப்பில் இராணுவத்தை பயன்படுத்தியது வரையில் கோத்தபாயவின் தந்திரமான அரசியலே என்பது குழந்தையும் அறிந்த காரியம்தான். ஆனாலும் நம்பவர்கள், இது அரசியல் பேசும் காலமில்லை, அரசுக்கு ஒத்துழைக்கும் காலம் என்றார்கள்.

வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்த காலங்களிலும் இதுபோன்ற கொரோனா பேரிடர் காலங்களிலும் நமது வெகு சில தமிழர்கள் ஸ்ரீலங்கன் ஆகிவிடுவதைப் பார்த்திருக்கிறேன். தமிழ் மக்களை நிர்வாணமாக்கி மனிதத் தன்மையின்றி இன அழிப்பு செய்த இராணுவத்தின் கொடுமைகளை மறந்து அவர்களை போற்றுவதையும் பார்த்திருக்கிறேன். கதைகளில் படித்திராத, பெரும் சாதனைகளை செய்த பெரு நாயகர்களை சந்தித்த ஈழ மண்ணில் இருந்து கொண்டு சோதனைச்சாவடியில் நிற்கும் இராணுவத்தை ஹீரோ என்பது நகைப்பானதல்லவா? அப்படிப்பட்ட தமிழ் மக்களுக்கு இதே கொரோனா காலத்திலேயே “தமிழர்கள் யார்?” என்பதை குறித்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச தெளிவான பதிலை தன் பாணியிலேயே சொல்லியிருக்கிறார்.

இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தை ஒரு போர்க் காலமாக சிங்கள அரச படைகள் மாற்றியிருந்தன. வழமைக்கு மாறான இராணுவ ரோந்துகள்கூட முல்லைத்தீவு வீதியில் நடந்து கொண்டிருந்தன. கடுமையான கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட இல்லாத இராணுவ சோதனைச்சாவடிகள் திறக்கப்பட்டன. தமிழர்களின் நினைவேந்தலை தடுப்பதற்கு கிருமியை துணையாக்கிக் கொண்டது இலங்கை அரசு.

நினைவேந்தல் நிகழ்வுக்காக மே 18 அன்று கிளிநொச்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் புறப்பட்டேன். அன்றைக்கு காலையிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பட்ட செய்தியும் வந்திருந்தது. அதைப்போல யாழிலிருந்து வந்த பலரும் ஆனையிறவிலும் சங்குப்பிட்டியிலும் வைத்து திருப்பி விடப்பட்டனர். தருமபுரத்தில் இருந்த சோதனைச்சாவடியில் வைத்து நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டோம்.

அந்த சோதனைச்சாவடி வழமைக்கு மாறான கடும் இராணுவப் பிடியில் இருந்தது. சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் எம்.பி. அந்த மாவட்ட வேட்பாளர். சிறீதரனை அனுமதிக்க முடியாது என்று கடும் பிடியில் சொன்னார் காவல்துறை பொறுப்பதிகாரி. ஆனாலும் முள்ளிவாய்க்கால் சென்ற பலரும் அங்கிருந்து திருப்பி அனுப்பட்டனர். முன்னாள் எம்.பி சாள்ஸ்சும் திருப்பி அனுப்பட்டார். சாதாரண மக்கள் முதல் ஊடகவியலாளர்கள் வரை தடையே. கடுமையான மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. கொரோனாவின் பெயரால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கிற முனைப்பில் கடுமையாய் இருந்தது இராணுவம். மிக அருகில் இருந்து பல நூறு கிலோமீற்றர்கள் ஓடி ஒருவாறு முள்ளிவாய்க்காலை அடைந்தோம்.

உரிமைக்கும் விடுதலைக்கும் போராடிய ஈழத் தமிழ் இனம், அறமற்ற போரின்மூலம் இன அழிப்பு செய்யப்பட்ட நிலம் முள்ளிவாய்க்கால். ஈழத் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதை சொல்வதும் அந்த நிலம்தான். ஈழத் தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்பதை சொல்வதும் அந்த நிலம்தான். முள்ளிவாய்க்கால் முடியவில்லை என்பதையும் தமிழர்கள் இன்றைக்கு என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் இன்றும் உரைப்பதும் அந்த நிலம்தான். முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழ் இனம் அழிக்கப்பட்ட சாட்சி மாத்திரமல்ல. வாழ்தலின் குரலையும் கொண்ட நிலம்.

கொரோனா பேரிடர் காலத்திற்கு ஏற்ப, சுகாதார முறைகளுடன் உரிய வகையில் மக்கள் அஞ்சலியை செலுத்தினர். எதற்காக இன்றைக்கு இந்த வீதிகளை மூடி மக்களை தடுத்தனர்? எம் மக்கள் ஆயுதங்களை ஏந்தியா வந்தனர்? முள்ளிவாய்க்கால் நிலத்தில்தான் எங்கள் சீருடைகளையும் ஆயுதங்களையும் துறந்துவிட்டோமே? எல்லாவற்றையும் துறந்து எல்லாவற்றையும் இழந்தல்லவா எம் மக்கள் முள்வேலிச் சிறைகளுக்குச் சென்றனர்? இப்போது எங்களிடம் கண்ணீர் மாத்திரம்தானே இருக்கிறது. எங்கள் மக்கள் ஒரு தீபம் ஏற்றவும் ஒரு சொட்டு கண்ணீர் விடவுமே முள்ளிவாய்க்காலுக்கு செல்லுகின்றனர். அதற்கும் தடையா? தமிழ் மக்கள் ஏற்றும் தீபமும் சிந்தும் கண்ணீரும் இலங்கையை இரண்டாக்கி விடுமா?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும் புலிகளின் அஞ்சலியாக அரசு பார்க்கிறதென்றால், அழிக்கப்பட்ட மக்களையும் புலிகளாகவே அரசு கருதுகிறதா? அல்லது எஞ்சி இன்று வாழ்கிற மக்களையும் புலிகளாக அரசு கருதுகிறதா? இந்த தீவில் வாழும் ஈழத் தமிழ் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது வரலாறு முழுதும் ஒரு முக்கியமான நாளாகவே இருக்கும். வரும் தலைமுறைகள் யாவும் நினைவுகூரும். இதனை தொடர்ந்தும் தடுக்க அரசு முனைந்தால் வரலாறு முழுதும் தமிழினத்துடனான முரண்பாடு ஒரு போராகத் தொடரத்தான் போகிறது. முள்ளிவாய்க்கால் போருக்கும் அமைதிக்குமான புள்ளி.

இறந்தவர்களை நினைவுகூர முடியாதென தடுப்பது எத்தகைய மனித உரிமை மீறல்? இறந்தவர்கள்மீதே இத்தகைய வன்மத்தை செலுத்துகிற அரசு உயிரோடு இருப்பவர்கள்மீது எப்படி வன்மத்தை செலுத்தும்? அதற்கும் சாட்சியாகிறது முள்ளிவாய்க்கால். அப்படினெயில் தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வது எப்படி? இந்த இன ஒடுக்குமுறையும் பாரபட்சமும் எவ்வளவு கொடியது? இதே காலத்தில் போர் வெற்றி விழாவை அரசாங்கம் கொழும்பில் முன்னெடுத்தது. வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது நீதிமன்றம் பாய்ந்து தனிமைப்படுத்தல் தீர்பபை வழங்கியது.

ஆனால் சுகாதார முறைகளுக்கு பொருத்தமில்லாமல் போர் வெற்றி விழாவில் கலந்து கொண்டவர்கள் அமர்ந்திருந்தனர். அப்படியா நிலையில் போர் வெற்றி விழாவை செய்த எந்த தடையும் இல்லை. ஆனால் போரில் இறந்தவர்களை நினைவுகூரத்தான் தடை என்பது, இந்த தீவில் காலம் காலமாய் தொடரும் இன ஒடுக்குமுறையின் தொடர்ச்சியான அணுகுமுறைதான். தமிழர்களுக்கு ஒரு சட்டம், சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் என்ற அதே பழைய அணுகுமுறைதான். தமிழர்களுக்கு ஒரு நீதி, சிங்களவர்களுக்கு ஒரு நீதி என்ற மாகாவம்ச மனநிலையின் வெளிப்பாடுதான் இது.

தமது போர் வீரர்கள்மீது அழுத்தங்களை பிரயோகித்தால், உறுப்புரிமையை விலக்கிக்கொள்ள நேரிடும் என்று இலங்கை ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையை கடுமையாக எச்சரித்துள்ளார். மனித குலமே நடுங்கும் இனவழிப்புக்களை செய்துவிட்டு தமிழர்கள் கண்ணீர் விடுவதற்கும் நினைப்பதற்கும் தடை விதித்துக் கொண்டுதான் இதை சொல்லியிருக்கிறது அரசு. நீங்கள் போர் வீரர்களை காப்பாற்ற ஐ.நாவை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்றால், நாம் அப்போரில் இறந்தவர்களை நினைத்து கண்ணீர் விடவும் நினைவுக்கவும் பிரிந்து தனிநாடு செல்வது நியாயமானதல்வா?

இத் தீவில் ஒரு தினம், தமிழ் மக்களுக்கு கண்ணீருக்கு உரிய நாளாகவும் சிங்கள மக்களுக்கு கொண்டாட்டத்திற்குரிய நாளாகவும் இருக்கிறது என்றால் நாம் ஒரு நாட்டு மக்களாக இருக்க முடியாது. எங்கள் மனங்கள் மிகவும் கனத்துபோகிறது. “என் குருதி உனக்கு கொண்டாட்டமாகவும் எனக்கு கண்ணீராகவும் உள்ளவரையில் நீயும் நானும் வெவ்வேறு நாட்டினரே. என் துயரம் உன் மண்ணில் வெற்றிக் கொடியாகவும் என் மண்ணில் தலை கவிழ்ந்த தோரணமாகவும் உள்ளவரையில் இத் தீவில் இரு நாடுகளே.” ‘தமிழர்கள் ஸ்ரீலங்கன் இல்லை’ என்பதை முள்ளிவாய்க்கால் மாத்திரமல்ல, முள்ளிவாய்க்காலை நினைவுகூற மறுக்கும் தென்னிலங்கையும் அழுத்தமாகவே சொல்கிறது.

கவிஞர் தீபச்செல்வன்