சுமந்திரனை கொல்ல முயன்றது கோட்டாவின் ஆட்களா? – சிறீதரனுக்கு திறந்த மடல்!

letter to sri
letter to sri

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு!

தமிழ்க்குரல் ஊடகம்மீது ஒரு தலைப்பட்சமாக நீங்கள் சுமத்தி வரும் அவதூறுகளுக்கும் ஒரு ஊடகத்திற்கு எதிராக முன்னெடுத்து வரும் கருத்துச் சுதந்திர மீறலுக்கும் எதிராக பலமுறை சுட்டிக்காட்டி விளக்கம் கோரியிருந்தோம். அத்துடன் விமர்சனங்களையும் நியாயமான கேள்விகளையும் அவதூறுகளை முதலீடாகக் கொண்டு காறி உமிழ்வதும் மிரட்டுவதும்தான் உங்கள் வெளிப்பாடாக இருக்கின்றது.

இந்த நிலையில், நீங்கள் தற்போது எடுத்திருக்கும் சுமந்திரன் ஆதரவு நிலைப்பாடு தொடர்பில் இலங்கையில் மாத்திரமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருவதுடன் அண்மையில் ஒரு ஊடகத்திற்கு இது பற்றி நேர்காணல் வழங்கும்போதும்கூட மிரட்டலாகவும் சண்டித்தனமாகவும் பேசுவதையும் கண்டோம். உங்கள் மீதான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் இப்படியான மிரட்டல்களும் அவதூறுகளும்தான் உங்கள் பதிலா?

சுமந்திரன் விடுதலைப் போராட்டம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்த சமயத்தில், அது பற்றி உங்களதும் உங்களுக்கு கீழ் இயங்கும் கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனதும் கருத்தைப் பெற தமிழ்க்குரல் ஊடகம் முயன்றது. நீங்கள் பதில் அளிக்கவில்லை. இறுதியில் கரைச்சிப் பிரேதச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்களை எமது நிறுவனப் பணிப்பாளர் தொடர்புகொண்டு அவரது கருத்தைக் கேட்டு எமது ஊடகத்தில் பிரசுரித்திருந்தோம். இச்சம்பவம் நடந்தது மே 13 2020. அந்த தொலைபேசி முகப்புக் காட்சியை (ஸ்கிரீன் சாட்) வைத்துக் கொண்டு இப்போது உங்களையும் உங்கள் கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளரையும் தொடர்பு கொண்டு நாம் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஆதரவாகக் கருத்துக் கூற கெஞ்சுகிறோம் எனவும் எம்மை புலனாய்வாளர்களின் ஊடகம் என்றும் உங்கள் உதவியாளர்மூலம் முகநூலில் பொய்யுரைக்கிறீர்கள்?

எல்லாவற்றிலும் எப்போதுமே பொய்யுரைப்பதுதான் உங்களின் வேலையா? உங்களுக்கு கீழ் இயங்கும் கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் ஒருமுறை கிளிநொச்சியில் உள்ள தமிழ்க்குரல் அலுவலகத்திற்கு வந்து, ‘இது கோட்டாவின் பங்குடன் இயங்கும் ஊடகம்’ என்று நீங்கள் சொல்லிய விடயத்தை எமது பணியளார்களுக்கு ஒப்புவித்தார். அத்துடன் எமது ஊடகத்தில் கோட்டாவும் பங்குதாரர் என்பதற்கான ஆதாரம் இருப்பதாகவும் வேழமாலிகிதனிடம் தெரிவித்திருந்தீர்கள். அதைப்போன்று மற்றொரு தவிசாளரான சுப்பிரமணியம் சுரேனும் ‘இது இராணுவப் புலனாய்வாளர்களின் ஊடகம்’ என்று சொல்லி அவதூறு விளைவித்துள்ளார்.

அது மாத்திரமின்றி நீங்கள் கூறியதாக உங்களது இரு தவிசாளர்களும், ‘தமிழ்க்குரல் ஊடகம் சுமந்திரனை கொலை செய்ய முயன்றவர்களால் நடாத்தப்படும் ஊடகம்’ என்று உங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாடியுள்ளனர். அதுமட்டுமல்ல உங்கள் அவதூறுகளைக் கட்டுரையாக்கி அந்தக் காலத்தில் உங்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஊடகம் ஒன்றில் பிரசுரித்து சுயஇன்பம் கண்டீர்கள். அடிப்படையற்ற உங்களது அவதூறுப் பண்பை நாம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளத் தயராக இருக்கின்றோம்.

உங்களை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கும் விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கும் நீங்கள் விடுத்த கடுமையான அச்சுறுத்தல்களால் அவர்கள் வேறு கட்சிகளில் சென்று சேர வேண்டிய நிலைக்கு தள்ளிய பெருமை உங்களையே சேரும். அந்தளவுக்கு சண்டித்தனமான ஜமீன் அரசியலை முன்னெடுப்பது ஒரு படித்த அரசியல்வாதியின் பண்பாகாது. இன்று எமது நிறுவனரின் தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை உங்கள் ஊடகப் பினாமி மூலம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அச்சுறுத்தல்விடுக்க முயல்கிறீர்களா?. உங்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி நாங்கள் ஓய்ந்துவிடுபவர்களல்ல. உங்கள் அச்சுறுத்தல்களால் எங்கள் ஊடகப் பயணம் முடங்கிவிடாது. நேரிய எம் அறப்பயணம் இனிதே தொடரும்.

உங்கள்மீதான விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் உங்களுக்கு கீழ் இருப்போருக்கே பொய்சொல்லி அவர்கள் மூளைச்சலவை செய்து ஒரு பொய்யான விடயத்தை உண்மை என நம்பி அவர்கள்மூலம் பரப்புவது ஒரு கல்விப் புலத்திலிருந்து வந்த ஒரு நல்லாசிரியர், அதிபர் செய்யும் வேலையா? ஒரு ஆரோக்கியமான சமூகத்தை வளர்க்க வேண்டிய ஒரு அரசியல்வாதி அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளுக்கு பொய்யையும் பித்தலாட்டத்தையும் சொல்லி அவர்களை தவறானவர்களாக வளர்ப்பது எதற்காக? உங்களின் இதுபோன்ற தலையீடுகளாலும் வழிநடத்தல்களாலுமே கிளிநொச்சி கல்வியில் கடைசி நிலையில் இருக்கிறது. உங்கள் சுயநலத்திற்காக எதிர்காலச் சந்ததியைப் பலிக்கடாவாக்கும் நீங்கள் சமூகத்தில் இருந்து அகற்றப்படவேண்டி பார்த்தனீயம் செடி என்பது மீண்டும் நிரூபணமாகிறது.

நீங்கள் ஒரு ஆசிரியராக அதிபராக இருந்தீர்கள். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்ற பழமொழியை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். ஒரு பக்கம் கோட்டாவின் ஊடகம், இராணுவப் புலனாய்வாளர்களுக்கு ஆதரவான ஊடகம் என்று கதைகட்டிய தாங்கள் இன்னொரு பக்கம் இது சுமந்திரனைக் கொல்ல முயன்றவர்களால் நடாத்தப்படும் ஊடகம் என்று இன்னொரு கதையை புனைந்து பரப்புகிறீர்கள். இது இரண்டுக்கு என்ன தொடர்பு இருக்கிறது? அப்படியானால் சுமந்திரனைக் கொல்ல முயன்றவர்கள் கோட்டாவின் ஆட்கள்தான் என்று சொல்லவருகிறீர்களா?

சுமந்திரனின் கொலைக்கான சூத்திரதாரியைப்பற்றிய விபரங்கள் தெரிந்தும் காவல்துறைக்கு சொல்லாமல் உங்கள் ஆதரவாளர்களுக்குச் சொல்லும் சூட்சுமம்தான் என்ன? உங்களுக்கு இந்த விடயங்களை எப்படிக் கையாள்வது என்று தெரியாவிட்டால், ஒரு மாதத்திற்கு முன்பு நீங்கள் எதிர்த்த, இன்றைக்கு உங்கள் அன்புக்குரியவராக மாறியுள்ள சுமந்திரனிடம் தெரிவித்திருக்கலாமே? அவரைக் கொலைசெய்ய முயன்றவர்களின் தகவல்களை அவரிடம்கூட சொல்லாமல் இருப்பதன் காரணம் அவருக்கு ஆபத்து ஏற்படுவதை நீங்கள் உள்ளுர விரும்புகிறீர்கள் என்று அர்த்தப்படும் அல்லவா?

சிவஞானம் சிறீதரன் அவர்களே!

துளியளவு நேர்மையாவது உங்களிடம் இருந்தால், சுமந்திரனைக் கொல்ல முயன்றவர்கள் நாங்கள் என்று புறணி கதைத்துக்கொண்டிருக்காமல் உங்களிடம் உள்ள ஆதாரங்களை வைத்து காவல்துறையில் முறைப்பாடு செய்யுங்கள். சுமந்திரனை கொல்ல முயன்றவர்கள் என 15 அப்பாவிகள் சிறையில் வாடுகின்றனர் என்று அண்மையில் உங்கள் கட்சியின் சகவேட்பாளர் ஒருவரின் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இன்னும் எத்தனை பேரை சுமந்திரனை கொல்ல முயன்றவர்கள் என்று சிறையில் அடைக்கப் போகிறீர்களா? தமிழினத்தையே சிறையில் அடைப்பதுதான் உங்கள் நோக்கமா?

நீங்கள் சட்ட ரீதியாக அணுகும் பட்சத்தில், இலங்கையின் எந்த நீதிமன்றிலும் முன்னிலையாக நாங்கள் தயாராக இருக்கிறோம். எல்லா விடயத்திலும் வாய்க்கு வந்தபடி ஆதாரமும் அடிப்படையுமின்றிப் பேசிவிட்டு, வாய்மூடியாக இனியும் இருக்காமல் சட்ட ரீதியாக இந்தச் சவாலை எதிர்கொள்ள நீங்கள் தயாராக உள்ளீர்களா?

இந்த விடயத்தில் நீதிமன்றம் செல்லுவதன் வாயிலாக உண்மையான குற்றவாளிகளை சட்ட ரீதியாக அடையாளம் காணும் பட்சத்தில், அந்த அப்பாவிகள் விடுதலையாவதற்கு வழி பிறக்க நீங்கள் ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என்றும் நம்புகிறோம்.

-தமிழ்க்குரல் ஆசிரியர்பீடம்