சுமந்திரன் – சிறீதரன் டீலின் உண்மையான பின்னணி ?

Samakaala paarvai 1 2
Samakaala paarvai 1 2

பலரும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு விடயம் அண்மையில் நடந்தது. சுமந்திரனும் சிறிதரனும் ஒரு தேர்தல் டீலுக்கு வந்திருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தேசியத் தலைவர் என்று கூறும் சிறிதரனும், பிரபாகரனின் ஆயுத வழிமுறையை நான் ஒருபோதுமே ஏற்றுக்கொண்டதில்லை என்று மிகவும் வெளிப்படையாகவே கூறித்திரியும் சுமந்திரனும் எவ்வாறு ஒரு குடையின் கீழ் தேர்தல் பிரச்சாரம் செய்யமுடியும்? இது எப்படி சாத்தியம்?

அண்மையில் சிறிதரன் பேசியவிடயம் சலசலப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை தொடர்பான சந்திப்பொன்றின் போது, நீலன் திருச்செல்வம் தான் இதில் ஒரு விண்ணன் என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தார். அத்தோடு விடவில்லை – இன்னொரு கதையையும் சொல்லியிருந்தார். அதாவது, விடுதலைப் புலிகளின் தத்துவஆசிரியர் அன்ரன் பாலசிங்கம் போன்ற ஒருவர்தான் எம்.ஏ.சுமந்திரனாம். இந்த நகைச்சுகைக்கு பலராலும் சிரிக்கமுடியவில்லை. அனைவரும் கோபப்பட்டனர், உண்மையில் இது சிறிதரனின் முகத்திரையை அவரே கிழித்துவிட்ட சந்தர்ப்பம்.

உண்மையில், நீலன் திருச்செல்வமும் பேராசியர் ஜி.எல்.பீரிசும் இணைந்துகொண்டு வந்ததீர்வுப் பொதியை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களையும் விடுதலைப் புலிகளையும் பிரிப்பதற்கான ஒரு நாடகம்தான், இந்தத் தீர்வுப்பொதியென்று கூறி பாலசிங்கம் அதனை நிராகரித்தார். இவ்வாறானதொரு சுழலில்தான் நீலன் திருச்செல்வம் 1999ஆம் ஆண்டு, தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

விடுதலைப் போராட்டம் இடம்பெற்ற காலத்தில் சிறிதரன் என்னும் பெயரையாராவது – எங்காவது கேள்விப்பட்டதுண்டா? போராட்டம் நடைபெற்ற காலத்தில் கிளிநொச்சியில் ஏதோவொரு மூலையில் ஒரு வாத்தியாராக இருந்தவர்தான் இந்த சிறிதரன். இந்தக் காலத்தில் வன்னியில் வாழ்ந்த மக்களுக்கு என்ன தெரியுமோ, அந்தளவுக்குத்தான் இவருக்கும் போராட்டத்தைபற்றித் தெரியும். 2009இல் யுத்தம் நிறைவுற்ற பின்னர், இவரை முதல் முதலாக அரசியலுக்கு அழைத்து வந்தது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்தான். அவர் மூலம்தான் சிறிதரன் கூட்டமைப்புக்குள் நுழைந்தார். விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைவர் பிரபாகரனுக்கும் ஆதரவாகப் பேசி, முன்னாள் போராளிகள் குடும்பங்களை வசியப்படுத்தி, அவர்களது வாக்குகளைப் பெற்று, வெற்றிபெற்றார். வெற்றிபெற்றதும் அவர்செய்த முதல் வேலையே, சுரேஸ் பிரேமச்சந்தினை விட்டுவிட்டு, தமிழரசுக்கட்சியில் இணைந்துகொண்டதுதான்.

2010இல் தேசிய பட்டியல் மூலம் கூட்டமைப்புக்குள் நுழைந்த சுமந்திரன், சம்பந்தனின் கூறும் விடயங்களை மட்டும் செய்பவராகே இருந்தார். கூட்டமைப்புக்குள் சுமந்திரனுக்கென்று முக்கிய இடம் இருந்திருக்கவில்லை. ஆனால் சுமந்திரனுக்கு ஒரு முக்கிய இடத்தை உருவாக்க வேண்டுமென்னும் ஒரு இரகசியதிட்டத்தை சம்பந்தன் மனதில் வைத்திருந்தார்.

அதற்குமுதலில் சுமந்திரன் மக்களின் ஆதரவை பெற்றவராக மாறவேண்டும். இந்த அடிப்படையில்தான் 2015 தேர்தலில் சுமந்திரன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். உண்மையில் இதன் பின்னர்தான் சுமந்திரனின் ஆட்டம் ஆரம்பித்தது. சுமந்திரனை வெற்றிபெறச் செய்ததில் மாவை சோனாதிராஜாவிற்கும் சிறிதரனுக்கும் பெரியபங்குண்டு. மக்களின் பிரதிநிதி என்னும் அந்தஸ்துடன் மிகக் குறுகியகாலத்தில் சுமந்திரன் கட்சிக்குள் செல்வாக்கு மிக்க நபராகமாறினார். சுமந்திரனோடு நின்றால்தான் தங்களுக்கு அரசியல் எதிர்காலம் என்னும் நிலைமை தமிழரசு கட்சிக்குள் ஏற்பட்டது. மாவையின் ஆளுமைக் குறைபாடுகளும் இதற்கு முக்கிய காரணம்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் ஒரு டீல் துளிர்விட்டது. தமிழரசு கட்சியினதும் கூட்டமைப்பினதும் தலைமையை ஒரே நேரத்தில் கைப்பற்றுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. தேர்தல் முடிந்ததும் தனக்கு தமிழரசு கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை தருமாறு சிறிதரன் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இதன் மூலம் கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கை பெறமுடியும் என்பதுதான் சிறிதரன் போட்டதிட்டம்.

இவ்வாறானதொரு விடயம் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோதுதான் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்களை தீர்மானிப்பதிலும் சுமந்திரன் தனது மூக்கை நுழைத்தார். தனக்கு விருப்பமானவர்களை கட்சிக்குள் கொண்டுவர முற்பட்டார். ஆனால் இந்த இடத்தில்தான் மாவை சேனாதிராஜா விழித்துக் கொள்கின்றார். இதன் இறுதி இலக்கு தான் தான் என்பது அப்போதுதான் மாவைக்குத் தெரிந்தது. இதனை சம்பந்தனின் முழு ஆசியுடன்தான் சுமந்திரன் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பதையும் மாவை தெளிவாக புரிந்துகொண்டார்.

இந்தப் பின்னணியில்தான் தற்போது சுமந்திரனுக்கும் சிறிதரனுக்கும் இடையிலான உடன்பாடு ஏற்பட்டிருக்கின்றது. சிறிதரனும் சுமந்திரனும் இப்போது இலக்கு வைத்திருப்பது மவையின் இடத்தைத்தான். ஏனெனில் இம்முறை மாவை வெற்றி பெற்றால், சம்பந்தனுக்கு பின்னர் கூட்டமைப்பின் தலைவராக வரக் கூடிய தகுதியில் மாவைதான் இருக்கின்றார். அதனை தடுக்கமுடியாது. அதனை தடுக்க வேண்டுமாயின் இந்தத் தேர்தலில் மாவையை தோற்கடித்து வீட்டைவிட்டு துரத்தவேண்டும். ஒருவேளைமாவை, தேசியபட்டியல் மூலம் வந்தாலும் கூட, அவரால் தலைவர் பொறுப்பில் இருக்க முடியாது.

தற்போதுள்ள நிலையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தை பொறுத்தவரையில் மூன்று ஆசனங்களைத்தான் கூட்டமைப்பால் வெற்றிகொள்ளக் கூடிய நிலை காணப்படுகின்றது. அந்த மூன்றுக்குள்தான், மாவைசேனாதி வரவேண்டும். சித்தார்த்தன் வரவேண்டும். சுமந்திரன் வரவேண்டும். சிறிதரன் வரவேண்டும். இது எவ்வாறு சாத்தியம்? எனவே இப்போதுள்ள நிலையில் மாவையை தோற்கடிப்பதன் ஊடாகத்தான் சுமந்திரன் வெற்றிபெறமுடியும். ஒரு கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தும் திட்டம்.

மாவையை தோற்கடிப்பதன் ஊடாக, மவையை தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேற்றலாம். இதன் மூலம் தமிழரசு கட்சியின் முழுமையான கட்டுப்பாடும் சுமந்திரனிடம் வந்துவிடும். இதன் மூலம் சிறிதரன் தேசிய அமைப்பாளராகலாம். அதன் பின்னர் சுமந்திரன் கூட்டமைப்பின் தலைவராகவும், சிறிதரன் தமிழரசுகட்சியின் தலைவராகவும் வருவதை எவராலும் தடுக்கமுடியாது. அண்மையில் சம்பந்தன், அடுத்த தலைவராக வரவேண்டியவர் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவராக இருக்கவேண்டுமென்று தெரிவித்திருந்ததும் இந்த அடிப்படையில்தான். மாவையை தோற்கடிக்கும் திட்டத்தில் சுமந்திரனும் சிறிதரனும் வெற்றிபெற்றால். அதன் பின்னர் மாவையின் அரசியல் வாழ்வு பூச்சியமாகும். இதனை மாவை எவ்வாறு முறியடிக்கப் போகின்றார்?

தமிழ்க்குரலுக்காக கரிகாலன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)