அனந்திக்கு திறந்த மடல் : ஏமாற்று நடிப்பரசியல்தான் உங்களின் விருப்பமுமா?

Aasiriyar paarvai
Aasiriyar paarvai

ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக செயலாளர் அனந்தி அவர்களுக்கு,

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நெஞ்சில் ஏந்தி வந்தோம் என்று இதுவரையும் சொல்லிய தமிழ் அரசியல்வாதிகள் இன்றைக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கேவலப்படுத்துவதில் ஒருவரை ஒருவர் விஞ்சி வருகின்ற காலத்தில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களே, நீங்களும் ஏமாற்றும் நடிப்பரசியலும்தான் உங்களின் விருப்பும் முனைப்பும் என்பதை வெளிப்படுத்துகிறீர்களா?

அண்மையில் உங்களை ஈழத் தலைவியாகவும் ஈழத்து அம்மாவாகவும் காண்பிக்க முனைகின்ற பாடல் ஒன்றை இணையத்தளத்தில் கண்டு பலரும் எதிர்த்தும் கிண்டல் செய்தும் வருவதை நன்கு அறிவீர்கள். கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்த எந்தவொரு மானமுள்ள தமிழரும் இந்தப் பாடலைப் பார்த்து நிச்சயமாக முகம் சுழிப்பர்.

உங்களை தோற்கடிக்கவும், உங்கள் மக்கள் ஆதரவை குறைக்கவும் இத்தகைய பாடல் ஒன்றே போதுமானது. இதை எடுத்துச் சொல்லக் கூடியவர்களுடன் நீங்கள் இணைந்து பணியாற்றுவதில்லையா? இன்றைய காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தம்மால் இயன்றவரை விடுதலைப் போராட்டத்தையும் போராளிகளையும் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தி வருகிறார்கள். அதை நீங்களும் அறியாதவரா? அந்த வரிசையில் நீங்களும் இறங்கிவிட்டீர்களா?

இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலுக்காக “பாயும் புலிய நேரடியா வந்து பாரு ஈழத்தை ஆழ வந்த எங்கள் தலைவி அம்மா பாரு..” என்ற வரிகளைப் பாட உண்மையில் குற்ற உணர்வில்லையா உங்களுக்கு? சுமந்திரன், சிறீதரன் ஒரு வகையில் தலைவரை அவமதித்தார் என்றால், நீங்கள் இன்னொரு வகையில் “தமிழினத்தின் தலைவி அனந்தி அம்மா வாராடா தலைவன் இல்லையென்று நீ அச்சப்பட வேண்டாம் தமிழனத்தின் சொந்தக்காரி அனந்தி அம்மா வாராடா..” என்று அவமித்துள்ளீர்களே?

உங்கள் அரசியல் பயணம் எப்படித் தொடங்கியது என்பதை மறந்து விட்டீர்களா? நீங்கள் யாரின் பெயரில் தேர்தலில் வாக்கு கேட்டீர்கள்? உங்களுக்காக மக்கள் ஏன் வாக்களித்தார்கள்? இப்படி பாடல் போட்டு இளைஞர்களை தெருவில் அணி உலா செய்து நடிப்பரசியல் செய்யவா? காணாமல் ஆக்கப்பட்டவரின் மனைவியாக உங்கள் அரசியல் பயணம் தொடங்கியது. கையளிக்கப்பட்ட ஒரு போராளியின் மனைவி என்ற அடையாளத்துடன் அந்த மக்களின் பிரதிநிதியாக அல்லவா தேர்வு செய்யப்பட்டீர்கள்? உலகில் எவருக்கும் இல்லாத அந்த பாத்திரத்தின் முக்கியத்துவத்தை புரியவில்லையா உங்களுக்கு?

அந்த மக்களுக்காக இன்று என்ன செய்கிறீர்கள்? அந்த மக்களை வடக்கு கிழக்கில் இணைத்து போராட்டங்களை முன்னெடுக்கும் வேலையை செய்வதல்லவா உங்கள் கடமை? இன்றும் அந்த மக்களின் குரலாகவும் முகமாகவும் அரசியலை செய்யவேண்டியதல்லவா உங்களின் தனித்துவமான பணி? அதைவிடுத்து, ஈழத் தலைவியாகவும் பாயும் புலியாகவும் வேடம் போடுவது அந்த மக்களை எந்தளவுக்கு நோகடிக்கும்?

நீங்களும் எல்லோரையும் போலவே ஆகிவிட்டீர்கள். தலைவரைப் போல வேடமிட்டால் வாக்கு என்று சிலர் ஆடிய நாடகம் போலவும், இன்றைக்கு தலைவரை கொச்சைப்படுத்தினால் வாக்கு என்று ஆடும் நாடகம் போலவும் உங்கள் ‘ஈழத் தலைவி நாடகம்’ இருக்கிறது. உங்கள் அரசியலும் வேறு பாதை நோக்கி செல்கின்றது. எதற்காக உங்களுக்கு மக்கள் ஆதரவு அளித்தார்கள் என்பதை மறந்து பயணிக்கிறீர்கள்.

உண்மையில், இந்த பாடலும் நடிப்பும் உங்களை அறியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி நடந்திருந்தால், இதுவரையில் அந்த மறுப்பை தெரிவிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள். நீங்கள் குறித்த பாடலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஈழத் தமிழ் இனத்தின் இனப்படுகொலைக்கு நீதியை வெல்லுகின்ற, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கண்ணீரை துடைக்கின்ற அரசியலை முன்னெடுக்கும் உங்கள் பணியை செய்யத் தவறினால், மக்களால் நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள். இது உங்களை மாத்திரமல்ல, உங்களால் சில நல்ல மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் கணவரை போன்ற உன்னதமான போராளிகளையும் அகௌரவப்படுத்தும்.

இனியாவது சிந்தித்து செயலாற்றுங்கள்…

தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்