அமாவாசை சிறீதரனும் மணிவண்ணன் மாவையும்

samakaalamc
samakaalamc

அமைதிப்படை தமிழ் நாட்டு அரசியலின் கேலிக்கூத்துக்களை தத்துருபமாக பதிவு செய்த திரைப்படம். இன்றும் தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள் எல்லாம் அமைதிப்படை வழியாக மீம் செய்யப்படுகின்றது. ஆனால் அவ்வளவு வேகமாக இது இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பொருந்திவிடும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. இலங்கைத் தமிழ் அரசியலிலும் அமாவாசை என்ற கச்சிதாமான பாத்திரம் ஒன்று உருவாகியிருக்கிறது.

இந்தப் பத்தியைப் படிப்பவர்களுக்கு நிச்சயமாக அந்த அமாவாசை இப்போதே கண்ணுக்குள் வந்துவிடுவார். அமைதிப்படைத் படத்தில், மணிவண்ணன் ஒரு அரசியல்வாதியாக ஒரு கோயிலுக்கு செல்லும் போது, அங்கே தேங்காய் பொறுக்கிக் கொண்டிருப்பார் அமாவாசையாக நடிக்கும் சத்தியராஜ். முதலில் கட்சி எடுபிடியாக சேர்த்துக்கொள்ளப்பட்ட வர், ஒரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் மணிவண்ணனுக்குப் பதிலாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

கையைக் கட்டிக் கொண்டு அடிமை போல பம்மிக் கொண்டு இருந்த அமாவாசை, அந்த தேர்தலில் வெற்றி பெற மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருப்பார். அதாவது அமாவாசை நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ஆக உருமாற்றம் பெற மணிவண்ணன் அவருக்கு எடுபிடியாக மாறுவார். அப்படியொரு படம்தான் இலங்கை தமிழ் அரசியலிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு மகாநடிகன் திரையில் இல்லை தரையில் நடிக்கிறார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்தான் அந்த அமாவாசை. ஆமாம். 2010ஆம் ஆண்டு கால கட்டம். அப்போது போர் முடிந்து மக்கள் நொந்துபோயிருந்த நேரம். எந்த நோவும் இல்லாமல் தர்மபுரத்துடன் அம்புலன்ஸில் ஏறி வவுனியாவுக்கு ஓடிய சிறீதரனுக்கு முள்ளிவாய்க்காலும் தெரியாது, முள்வேலி முகாமும் தெரியாது. ஆனால் மக்கள் முள்வேலி முகாங்களில் அடைக்கப்பட்ட நேரத்தில் தேர்தலில் போட்டியிட ஆசனத்திற்காக வவுனியாவில் அலைந்தார். அதாவது கோயிலில் தேங்காய் பொறுக்கும் அமாவாசை போல..

அப்போது ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கெஞ்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட்டார். அப்போதும் தான் காணாத முள்ளிவாய்க்காலையும் தான் போகாத முள்வேலி முகாமையும் பற்றிப் பேசியதோடு, ஆர்பிஜியை தூக்கி அடித்தவர் போல புலிகளைப் பற்றியும் பேசி அதை வாக்குகளாக அள்ளும் நடிப்பில் ஈடுபட்டார். மட்டுமட்டான வாக்குகளைப் பெற்று தேர்தலில் வென்ற சிறீதரன் முதன் முதலில் அமாவாசை வேலையை காட்டியது சுரேஷ் பிரேமச்சந்திரனிடம்தான்.

தான் தமிழரசுக் கட்சி உறுப்பினர் என்றார் சிறீதரன். ஆனால் ஈபிஆர்எல்எப் ஊடாக வந்தவர், முதல் துரோகத்தை அங்கே தொடங்கி வைத்தார். தேர்தலில் வென்றவுடன் சுரேஷை கட்டிப்பிடித்து அவருடன் நின்றவர் மெல்ல மெல்ல நகர்ந்தார் மாவையின் பக்கம்.. அந்த ஒருமுறைதான் தான் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பேன் என்றும் பின்னர் அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு ஒதுங்குவதுதான் நல்ல பண்பு என்றும் வகுப்பெடுத்த சிறீதரனை 2009இற்கு முன்பு எவருக்கும் தெரியாது. சாதாரணமான ஒரு ஆசிரியர்தான்.

அதன் பிறகு, சதா புலிகளைப் பற்றி பேசி, கைகளை கட்டி, கைகளை நீட்டி வேடங்கள் தரித்து தலைவரின் உரையை வெட்டியும் ஒட்டியும் பேசினார். இன்னும் ஒருமுறை இருந்துவிட்டு போய்விடுவேன் என்று சொன்னவர், இப்போது மூன்றாவது முறையாகவும் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலுடன் அமாவாசையின் உச்ச ஆட்டத்தையும் சிறீதரன் தொடங்கியுள்ளார். இதற்காக சுமந்திரனுடன் ஒரு கூட்டையும் டீலையும் வைத்திருக்கிறார் சிறீதரன்.

மாவையை தோற்கடித்து, தமிழரசுக் கட்சியின் பதவியை கைப்பற்றுவதுதான் சிறீதரனின் அமாவாசை ஒப்பிரேசன். அத்துடன் அதேவேளையை தன்னைக் கொண்டு வந்த சம்பந்தனை தோற்கடித்து, கூட்டமைப்பின் தலைவர் பதவியை கைப்பற்ற சுமந்திரன் திட்டம் தீட்டியுள்ளார். ஒருமுறையுடன் போய் விடுவேன் என்றவர் இப்போது என்ன ஆட்டம் போடுகிறார் பார்த்தீர்களா?

இந்தப் பதவி ஆசை காரணமாகத்தான் தமிழினத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசியலை முன்னெடுத்துவரும் சுமந்திரனை சிறீதரன் ஆதரிக்கிறார். இந்த அமாவாசை ஓப்பிரேசனுக்காகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மோசமாக சித்திரித்து பரப்புரை செய்யும் சுமந்திரனை ஆதரிக்க சிறீதரன் தீர்மானித்துள்ளார். இதுவரை காலமும் புலிப் புராணம் பாடிவிட்டு, இப்போது புலிகளையும் அதன் தலைமையையும் பிழையாக காட்ட சிறீதரன் முற்படுகிறார். சுமந்திரனுக்காக இன்னொரு நடிப்பு. இன்னொரு படம் காட்டுகிறார்.

பதவிக்கும் சுகபோகத்திற்கும் சுமந்திரனை ஆதரிக்க தீர்மானித்த சிறீதரன், சாதாரணமான அமாவாசையல்ல. பதவிக்கும் சுகபோகத்திற்கும் பிரபாகரனை எதிர்க்கும் ஒரு சிங்கள மனநிலை கொண்ட சுமந்திரனை ஆதரிக்கும் சிறீதரன் நாளை சிங்கள அரசிடம் இணைந்தால்கூட ஆச்சரியமல்ல. இந்த அமாவாசையின் ஆட்டம் வெல்லுமா? வென்றால் பெரும் பாதிப்பு தமிழர்களுக்குத்தான். அமாவாசையின் திட்டத்தை தோற்கடிக்க மணிவண்ணன் நிலையில் இருக்கும் மாவை என்ன செய்யப் போகிறார்? அமாவாசை ஒப்பிரேசன் நிறைவேறினால் அடுத்த அமாவாசை ஒப்பிரேசன் சுமந்திரனுக்கு எதிராகத்தானாம்..

-ஆசைமுத்து சங்கரன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)