ஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்

Aasiriyar paarvai 1
Aasiriyar paarvai 1

ஸ்ரீலங்காவின் பாராளுமன்றத் தேர்தல் 2020 முடிவுகள் பல்வேறு பாடங்களைக் கற்பித்துவிட்டுச் சென்றுள்ளன. குறிப்பாக தமிழ் தேசியம் ஆபத்தின் விளிம்பில் இருப்பதை இத் தேர்தல் முடிவுகள் தெளிவாக எடுத்துரைத்துள்ளன. தமிழ் தேசியத்தின் பெயரால் அரசியல் செய்யும் கட்சிகளின் பிழையான செயற்பாடுகள் மக்களை எந்தளவுக்கு பாதித்துள்ளன என்ற பாடத்தை இத் தேர்தலில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்த கால தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுகின்ற போது இந்தத் தேர்தல் முடிவானது, மக்களுக்கு போலித் தமிழ் தேசிய அரசியலின் பால் ஏற்பட்டுள்ள அதிருப்தியை, வெறுப்புணர்வை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றது. தமிழ் தேசியத்தின் பெயரில் அரசியல் செய்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. அக் கட்சியில் எழுபதாயிரத்திற்கும் அதிகமான விருப்பு வாக்கை பெற்ற எஸ். சிறீதரன் இம்முறை பாதி வாக்குகளையே பெற்றுள்ளார்.

அதேபோன்று கூட்டமைப்பில் பிரதான அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தோற்றகடிக்கப்பட்டுள்ளார். விமர்சனங்களையும் மக்களின் ஆதங்கங்களையும் புரிந்துகொள்ளாமல், எடுத்தெறிந்து தான்தோன்றித் தனமான அரசியலை செய்து வந்தமையின் விளைவுதான் இது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசியம்மீது எப்படியான பற்றுதி கொண்டிருக்கிறது என்பதற்கும் அதனை நடைமுறையில் எப்படி வெளிப்படுத்துகின்றது என்பதற்கும் அக் கட்சி பெற்ற வாக்குகளே சாட்சிகள் ஆகின்றன.

வடக்கின் முக்கிய பகுதியான யாழ்ப்பாணத்தில் சிங்கள தேசியக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன் அதிகூடிய விருப்பு வாக்கை பெற்றுள்ளார். இந்த மக்கள் அங்கஜனை தேர்வு செய்வதற்கான மறைமுக காரணியாக இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிழைத்துப்போன அரசியல் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த காலத்தில் தமிழ் தேசியம் பேசியோருக்கு விருப்பு வாக்குகள் அதிகம் கிடைத்த நிலையில் இம்முறை அவர்கள் பின்தள்ளப்பட்டு, சிங்களக் கட்சியில் போட்டியிட்ட அங்கஜன் அந்த இடத்தை பெற்றிருப்பது சாதாரண நிகழ்வல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதான அதிருப்தியால் மக்கள் வேறு தேர்வுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையை தேர்தல் முடிவுகள் பலவும் எடுத்துரைக்கின்றன. இன அழிப்பு செயல்களில் ஈடுபட்ட கட்சிகளுக்கு நேரடியாக வாக்களித்துள்ள மக்கள், அந்த இன அழிப்புக்கு மறைமுகமாக துணைபோகும் கூட்டமைப்பு உறுப்பினர்களை தோற்கடித்தும் நிராகரித்தும் உள்ளனர். இந்த விடயங்கள் குறித்து தமிழ்க்குரல் கடந்த காலத்தில் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. அவைகளை பொருட்படுத்தால் ஊடகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் விடுத்து வந்தனர்.

வாக்கு வீழ்ச்சியுடன் அவர்கள் பெற்றுள்ள வெற்றி என்பது தோல்விக்கு சமமானது. ஆனால் இப்போதும் அதனை உணராமல் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இவை யாவும் தமிழ் தேசியம் ஆபத்தின் விளிம்பில் இருக்கின்றது என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றது. வடக்கின் முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரனின் புதிய வரவு, தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு கிடைத்த ஆசனங்கள் என்பன இந்த தேர்தலில் ஆறுதலை தரக்கூடிய செய்திகள். ஆனாலும் கிழக்கில் கிடைத்திருக்கும் முடிவுகள் தமிழ் தேசியத்தின் நெருக்கடி நிலையை நன்றாக உணர்த்துகின்றன.

கிழக்கில் பிள்ளையான் மற்றும் வியாழேந்திரனின் வெற்றி, அம்பாறையின் தமிழர் பிரதிநித்துவ இழப்பு என்பன தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தான்தோன்றித் தனமான துரோக அரசியலுக்கு கிடைத்த பரிசுகளே. இனியும் தமிழ் தேசியத்தின் பெயரால் கூட்டமைப்பு துரோகங்களை தொடர்ந்தால் எதிர்வரும் தேர்தலின் முடிவுகள் கூட்டமைப்புக்கு பூச்சியத்தை கொடுக்கும். ஆனாலும் அவை தமிழ் தேசியத்தின் வீழ்ச்சியாக மாறப்போவதில்லை. தமிழ் தேசியத்திற்காக வாக்களித்த மக்கள் இன்னமும் தமது பற்றுதியை கைவிடவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்த வரையில் மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நம்பிக்கையை இழந்தபோதிலும் தமிழ் தேசியத்தில் நம்பிக்கையை இழக்கவில்லை. கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள் இம்முறை தமிழ் தேசியம் பாதையில் செல்லும் இன்னும் இரண்டு புதிய மாற்று அணிகளுக்கு தமது வாக்குகளை அளித்துள்ளார்கள். அது தமிழ் தேசியத்தை வலுப்டுத்துகின்ற பயணத்திற்கு உரம் சேர்த்துள்ளது. ஆனாலும் நெருக்கடியின் எச்சரிக்கை நிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற மக்கள் எதற்காக கூட்டமைப்புக்கு வாக்களிக்கவில்லை என்பதையும் எதற்காக மாற்று கட்சிகளுக்கு வாக்களித்தார்கள் என்பதையும் தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் மூன்று பிரதான கட்சிகளும் உணர்ந்துகொள்ள வேண்டும். அதனை புரிந்துகொள்ளத் தவறினால் கிழக்கில் பிள்ளையான், வியாழேந்திரன் வென்றமை போன்ற பல சம்பவங்கள் வடக்கிலும் அதிகரிக்க வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.

மக்கள் சிங்கள அரசின் இடைத் தரகர்களுக்கு வாக்களிக்காமல் நேரடியாக தரகர்களுக்கு வாக்களித்துள்ளனர். வடக்கு கிழக்கில் ஐந்து ஆசனங்களை சிங்கள தேசியக் கட்சிகள் கைப்பற்றியுள்ளன. இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரித்தால் அது தமிழ் தேசியம் முற்றாக வீழுகின்ற நிலையை ஏற்படுத்தும்.

வடக்கு கிழக்கில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், இனியேனும் முன் மாதிரியான அரசியலை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக தமக்கு வழங்கப்படும் மாதாந்த ஊதியத்திற்கு அப்பால், அவர்களு்ககு கிடைக்கும் பிற சலுகைகள் வேலை வாய்ப்புக்களை தமது சொந்தங்களுக்கு வழங்காமல், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும். நாங்கள் சலுகை அரசியலுக்கு எதிரானவர்கள் என்று கூறிவிட்டு, உரிமையையும் பெற்றுக் கொடுக்காமல், அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுக்காமல், தமது சொந்த வீடுகளுக்கு சலுகையை அள்ளி வீடுகளை அபிவிருத்தி செய்கின்ற தன்னல அரசியலை இனியும் அனுமதிக்கின்ற நிலையில் மக்கள் இல்லை.

தமிழ் தேசிய அரசியலில் கொள்கைக்கும் இலட்சியத்திற்கும் உரிய மதிப்பு கொடுக்கப்பட வேண்டும், விடுதலைப் போராட்டம் மீது நேர்மையாக பற்றுதி தேவை, சலுகைகளுக்கு விலைபோகக்கூடாது போன்ற செய்திகளை வடக்கு கிழக்கு மக்கள் நன்றாக இத் தேர்தலில் வலியுறுத்தியுள்ளனர். தமிழ் தேசியம் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டமை, மாற்றுத் தலைமைகளின் வருகை என்பன தமிழ் தேசியத்தின் எதிர்காலப் புள்ளிகளாக திறப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு தலைவர்கள் மக்களுக்கு உண்மையாக நேர்மையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். தேர்தலில் வென்றவர்கள் அதனை செய்வார்களா?

ஆசிரியர் பீடம் – தமிழ்க்குரல்.

07.08.2020