சிவாஜிலிங்கம் ஒரு தமிழ் தெரிவு?

sivaji
sivaji

அண்மையில் ஜந்து கட்சிகள் இணைந்து ஒரு பொது உடன்பாட்டிற்கு வந்திருந்தன. நீண்ட காலமாக, தங்களுக்குள் தெருச் சண்டை பிடித்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் அனைத்தும் ஒரு நேர்கோட்டில் சந்தித்திருந்தமை ஒரு நல்ல விடயம்தான். ஆனாலும் அப்போதும் கூட ஒரு சிறிய விடயத்தை முன்வைத்து கஜேந்திரகுமார் வெளியேறிவிட்டார். ஐந்து கட்சிகளும் இணக்கம் காணப்பட்ட தமிழர் கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்களில் ஒருவரான கோட்டபாய ராஜபக்ச நிராகரித்துவிட்டார். அவ்வாறான ஆவணத்துடன் வரும் கட்சிகளை தாம் சந்திக்கப்போவதில்லை என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுவிட்டார்.

இந்த நிலையில் அடுத்த பிரதான வேட்பாளரான சஜித் பிரேமதாச தமிழ் கட்சிகளை சந்திப்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது உறுதியான முடிவை வெளியிடுவதில் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எனது கணிப்பின்படி கூட்டமைப்பு இறுதியில் எவருக்கும் ஆதரவு வழங்காமல் விடுவதற்கும் வாய்ப்புண்டு. ஆனால் சில உள் தகவல்களின்படி சம்பந்தன் – சுமந்திரன் தரப்பு தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக அறிக்கையொன்றை வெளியிடலாம். இறுதி நேரத்தில் இதனை செய்தால் எவருக்கும் எதிர்த்து செயற்படுவதற்கு அவகாசம் இல்லாமல் போகலாம் என்று சம்பந்தன் எண்ணுவதாவும் தகவலுண்டு. ஆனாலும் கூட்டமைப்பின் ஆதரவை தான் வெளிப்படையாக பெறுவது தனது சிங்கள வாக்குவங்கியை பாதிதித்துவிடும் என்றே, சஜித் கணிப்பதாகத் தெரிகின்றது. உண்மையில் இவைகள் அனைத்தும் தமிழ் மக்களின் உரிமைகளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள மறுகின்ற ஒரு சிங்கள வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்கான தமிழ் முயற்சிகள்தான்.

இன்று தென்னிலங்கை பிரச்சாரங்களை பார்க்கும் போது யார் யுத்த வெற்றிக்கு அதிகம் சொந்தக்காரர்கள் என்னும் போட்டிதான் இடம்பெறுகின்றது. கோட்டா தான் தான் என்கிறார். ஆனால் சரத்பொன்சேகாவோ இல்லை நான்தான் மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை யுத்தம் செய்து விடுதலைப் புலிகளை தோற்கடித்தவன் என்கிறார். அதாவது, ஒவ்வொருவரும் யார் அதிகம் தமிழ் மக்களை கொன்றவர்கள் என்பதில் போட்டி போடுகின்றனர். தான் வெற்றிபெற்றால் சரத்பொன்சோகாவை கௌரவித்து பாதுகாப்பு அமைச்சை அவரிடம் ஒப்படைப்பேன் என்கிறார் சஜித். இவ்வாறானதொரு பின்புலத்தில் நாம் கேட்கவேண்டிய கேள்வி – அவ்வாறாயின் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் ஏன் பங்குபற்ற வேண்டும்? ஒரு சிங்களவரை வெற்றிபெறச் செய்வதற்கு தமிழர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? ஏன் இந்த இடத்தில் ஒரு மாற்று தெரிவு தொடர்பில் சிந்திக்கக் கூடாது? ஏன் எங்களில் ஒருவரான சிவாஜிலிங்கத்தை ஒரு தமிழ் தெரிவாக்கக் கூடாது? தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் சிவாஜிலிங்கத்திற்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையவர்களில் உயிரோடிருக்கும் மிகச் சிலரில் சிவாஜியும் ஒருவர். துணிச்சல்மிக்க தமிழ்த் தேசியக் காரனாக தன்னை நிரூபித்த ஒருவர்.

2009 யுத்தம் முடிவுற்றதன் பின்னர் தாமே விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்றும், தாங்களே அவர்களை பின்தொடர்பவர்கள் என்றெல்லாம் பலர் திரிந்துகொண்டிருந்த போது, தலைவர் பிரபாகரனின் தகப்பனை, தாயாரை பராமரித்து அவர்களின் இறுதிக் கிரியைகளையும் செய்த ஒரே மனிதன் சிவாஜிதான். மகிந்த அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் துணிந்து காரியங்களை செய்தவர் சிவாஜி. தான் நம்பும் ஒன்றிற்காக தன்னை எப்போதும் பலியிடத் தாயாராக இருந்த ஒருவராகவே சிவாஜியின் கடந்தகாலம் கழிந்திருக்கிறது. ஒரு தமிழ் பொது வேட்பாளராக நிற்பதற்கு சிவாஜிலிங்கத்தை விடவும் தகுதியுடைய வேறு எவரும் வடக்கு கிழக்கில் இல்லை. எனவே சிவாஜிலிங்கத்தை ஒரு தமிழ் தெரிவாகக் கொள்வதில் ஏன் தடுமாற வேண்டும்? ஏன் தமிழர்களை இரண்டாம் தரமாக நடத்தும் சிங்கள வேட்பாளர்களுக்கு பின்னால் இழுபட வேண்டும்?

சிவாஜிலிங்கத்தை ஒரு தமிழ் தெரிவாக்குவதன் ஊடாக, சிங்கள வேட்பாளர்களால் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கான ஒரு மக்கள் ஆணையை வழங்க முடியும். எங்களுடைய உரிமைகளை ஏற்றுக்கொள்ளாத உங்களுக்கு எங்களின் வாக்குகள் இல்லை என்பதை சொல்வதற்கான ஒரு கருவியாக சிவாஜிலிங்கத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் ஊடாக சிங்கள தேசத்திற்கும் இலங்கைத்தீவில் தலையீடு செய்துவரும் அன்னிய சக்திகளுக்கும் தமிழர் தெரிவின் மூலம் ஒரு தெளிவான செய்தியை கூற முடியும். அதே வேளை இந்த வாய்ப்பை தமிழ் மக்கள் மத்தியில் தேசியம், தாயகம் சார்ந்து விழிப்புணர்வையும் ஒற்றுமையுணர்வையும் ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இதனை பயன்படுத்திககொள்ள முடியும்.

அவ்வாறில்லாது மீண்டும் சிங்கள தேர்தல் வியூகங்களுக்கு முண்டுகொடுக்கும் வேலையை தமிழ் கூட்மைப்பும் ஏனைய கட்சிகளும் செய்யுமாக இருந்தால், அது மீண்டும் மீண்டும் தமிழ் தேசிய அரசியலை சிங்கள சிறைக்குள் தள்ளுவதாகவே இருக்கும். 2015இல் இவ்வாறுதான் தமிழ்த் தேசிய அரசியலை கூட்டமைப்பு சிங்கள சிறைக்குள் தள்ளியது. அவ்வாறு தள்ளப்பட்ட அரசியலை இன்றுவரை விடுதலை செய்ய முடியவில்லை. இன்றுவரை ரணிலின் சிங்கள வியூகத்திற்குள்தான் கூட்டமைப்பு இருக்கிறது. இப்போதும் கூட ஒரு வேளை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டிருந்தால் சுமந்திரன் – சம்பந்தன் தரப்பு இந்தளவு குழம்பியிருக்காது. தங்களுடன் முரண்பாடு கொண்டிருந்த விக்கினேஸ்வரனுடனும் கஜேந்திரகுமாருடனும் ஒரே மேசையில் அமர்ந்திருக்காது. ஆனால் ரணில் சற்றும் எதிர்பாரா வகையில் ஜக்கிய தேசியக்கட்சிககுள் ஒரு உட்புரட்சி இடம்பெற்றது. சஜித் தவிர்க்க முடியாத ஆளுமையாக வெளியில் தெரிந்தார். இதன் காரணமாக ரணில் அரங்கிலிருந்து ஒதுங்க நேர்ந்தது. இதனை சம்பந்தன் – சுமந்திரன் தரப்பு சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாகத்தான் இப்போது சஜித்திடம் நிபந்தனைகளுடன் செல்ல முற்படுகின்றது. ரணில் என்றால் அவ்வாறான நிபந்தனைகள் தேவைப்பட்டிருக்காது. ஆனால் உண்மையில் சிவாஜிலிங்கத்தை ஒரு பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் இன்று கூட்டமைப்பு செய்ய வேண்டியது ஆனால் அதனை செய்வதற்கு சிங்கள நிகழ்சிநிரல் அனுமதிக்கவில்லை. தமிழ் தேசிய சிவில் அமைப்புக்களும், புத்திஜிவிகளும், புலம்பெயர் அரசியல் அமைப்புக்களும் முன்னால் இருக்கும் ஒரு தெரிவு சிவாஜிலிங்கம் மட்டுமே! அவரை நோக்கி மக்களை அணிதிரளச் செய்வதும், அவற்றை வாக்குகளாக திரட்டுவதற்கான போதிய உதவிகளைச் செய்வதுதான் இன்றைய நிலையில் உண்மையான தமிழ்தேசியப் பணி.

தமிழ்க் குரலுக்காக கரிகாலன்