ஆகாயத்தை பார்த்து காறி உமிழும் அங்கஜன்! அவமானம் யாருக்கு?

samakaalam 2
samakaalam 2

எதிரிகள்கூட செய்ய விரும்பாத கேவலங்களை துரோகிகள் செய்வதை நாம் எப்போதும் பார்த்து வருகின்றோம். வடக்கில் இன்னொரு துரோகி ஒருவர் உருவாகி வருகின்றார். சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக – பந்சோந்தி அரசியல்வாதியாக – பதவிக்காகவும்  பணத்திற்காகவும் சொத்துக்காகவும் எந்த கீழ் நிலைக்கும் தான் இறங்கக்கூடியவர் என்பதை அங்கஜன் இராமநாதன் நிரூபித்துள்ளார். இவருக்காக – இவரின் சிறிய தந்தை நடத்தும் ஊடகத்தில் நீதியரசர் விக்னேஸ்வரனை அவதூறு செய்யும் விதத்தில் நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் விக்னேஸ்வரன் குறித்த விமர்சனங்கள் – அவர் குறித்து பயன்படுத்த இழிசொற்கள் – அதை உச்சரித்த விதம் என்பன உண்மையில் எதிரிகள் கூட செய்ய நினைக்காத – துணியாத கேவலமான செயலாகும்.

வடக்கு மாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் சவக் கிடங்கைதானும் மீட்க முடியவில்லை என்று சாடியிருக்கிறீர்கள். இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்ய ஓர் இடம் இருக்கிறது என்றால் அது வடக்கு மாகாண சபையால் – அதுவும் அவரின் கீழான ஆட்சியில்தான் சாத்தியமாகிற்று. “நான்தான் உண்மை தமிழ்த் தேசியவாதி” என்று மார்தட்டும் நீங்கள் பின்கதவால் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த காலத்தில் எதை சாதித்தீர்கள்? அடுத்தவர் போட்ட வீதியையே உரிமை கொண்டாடி ‘தெருத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தீர்கள்’. இப்படி அடுத்தவரின் திட்டங்களை சொந்தம் கொண்டாடியதை தவிர்த்து அங்கஜனான நீங்கள் செய்த சாதனைதான் என்ன?

உண்மையில் வடக்கின் முன்னாள் முதல்வரும் நீதியரசருமான விக்னேஸ்வரனின் பெயரை உச்சரிப்பதற்குகூட அங்கஜனுக்குத் தகுதி இல்லை. மக்களை ஏமாற்றி – அவர்களின் ஏழ்மையையும் – இயலாமையையும் பயன்படுத்தி அரசியல் செய்தும் – பேரினவாதக் கட்சிகளின் கால்களை நக்கிப் பிழைத்து – தமிழ் மண்ணுக்கு விரோதமான அரசியலையே முன்னெடுத்து வருபவரே இந்த அங்கஜன். இவருக்கு, முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் இனத்திற்காக இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றி உலகத் தமிழ் மக்களிடையே உயர் மதிப்பை பெற்ற விக்னேஸ்வரன் பற்றி பேசுவதற்கு எந்த அருகைதையும் இல்லை. இதற்கு பின்வரும் காரணங்களை அடிப்படையாக முன்வைக்கிறோம்.

வேலை வாய்ப்புப் பெற்றுத் தருகின்றோம் என்று கூறி அவர்களிடம் விண்ணப்ப படிவங்களை வழங்கி நிரப்ப வைத்து, வேலை வாய்ப்புக்கான கூட்டம் என்று அழைத்து, அதனை அரசியல் கூட்டமாக்கி அவர்களை ஏமாற்றும் உங்களுக்கு விக்னேஸ்வரன் பெயர் சொல்ல அருகதை இல்லை.

பணமும் சாராயமும் கொடுத்து, வாக்குகளை வாங்கி அரசியல் செய்கின்ற – வன்முறை குழுக்களை வைத்து வாக்குகளை சேகரிக்கும் உங்களுக்கு விக்னேஸ்வரன் பெயரை சொல்லத்தன்னும் தகுதி இருக்கிறதா என உங்களை நீங்களே முதலில் கேட்டுக் கொள்ளுங்கள்.

தேர்தல் வெற்றிக்காக விடுதலைப் புலிகளின் பாடல்களை பயன்படுத்திய நரித்தனம் ஊடகங்கள் வாயிலாக அம்பலமானது. இதை நம் தமிழ் மக்கள் இன்னமும் மறந்து விடவில்லை. தேர்தல் வெற்றிக்காக புலிகளின் பாடல்  வென்றதும் சிங்களத்தின் அடிமை. கொழும்பில் சென்று சிங்களப் பேரினவாத தலைவர்களின் கால்களை கழுவிவிட்டு, வடக்கில் வந்து எனது தலைவரும் பிரபாகரன் என்று சொல்லி அரசியல் செய்வதற்கு வெட்கம் இல்லையா? தேர்தலில் வெல்லவும் –  பதவிக்காகவும் எதனையும் செய்வது என்பது அரசியல் விபச்சாரம் ஆகும்.

மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்தால் அவரின் காலடியில் விழுவது, மைத்திரி வந்தால், அடுத்த செக்கனே மாறி மைத்திரியின் காலில் விழுவது, பிறகு கோத்தாபய வந்தால் உடனே ஓடிச்சென்று அவரின் காலில் விழுவது? இதெல்லாம் அரசியலா? இல்லவே இல்லை சுத்த வெட்கம் கெட்டத்தனம். 2015 தேர்தலில் மகிந்தவை ஆதரித்துவிட்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆனதும் கொஞ்சமும் வெட்கமும் தன்மானமும் இன்றி அவரை சரண் அடைந்தீர்கள். இதெல்லாம்  எவ்வளவு கேவலமான அரசியல் அணுகுமுறை?

அண்மையில், நடந்த தேர்தலில் கோத்தாவும் மகிந்தவும் வென்றவுடன்  சுயமரியாதை சிறிதுமின்றி, தன்மானமின்றி, அமைச்சுப் பதவியை பிச்சையாக கோருவதற்காக கூழை கும்பிடு போட்டதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். பதவிக்காக பந்சோந்தியைவிட அதிகம் மாறும் நீங்கள் விக்னேஸ்வரன் பெயர் சொல்லத்தானும் தகுதி கொண்டவரா?

இன அழிப்பாளர்களின் கட்சியில் தேர்தலில் நின்று, உங்கள் சொந்த இனத்தையே கருவறுத்தகளிடம் பதவியை பெற்று அரசியல் செய்து பிழைக்கின்ற உங்களுக்கு வடக்கில் அரசியல் செய்ய என்ன தகுதி உள்ளது?

இம்முறை உங்களுக்கு அமைச்சுப் பதவி மறுக்கப்பட்டமைக்கு என்ன காரணம்? நீங்கள் தமிழ் இனத்திற்கு மாத்திரம் துரோகம் இழைக்கவில்லை. சிங்களப் பேரினவாத தலைவர்களுக்கே மாறி மாறி துரோகம் இழைத்துள்ளீர்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் காலடியைப் பற்றி மாறி மாறி துரோகங்களை இழைத்து பதவியைப் பெறுவதுதான் உங்கள் நோக்கம் என்பதை புரிந்தே மகிந்த, கோத்தா தங்கள் அரசில் உங்களுக்கு பதவியை மறுத்து நல்ல தண்டனை அளித்துள்ளனர். இந்த நிலையிலும் இனத்திற்கு எதிராக மிக மோசமான வகையில் உங்கள் துரோகத்தை செய்துள்ளீர்கள். விக்னேஸ்வரனை அவமதிப்பு செய்வது என்பது, ஈழத் தமிழ் மக்களை அவமதிப்பு செய்வதாகும். அவர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தியதை அவமதிப்பது என்பது அங்கு ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களை அவமதிப்பு செய்வதற்கும் சமனாகும்.

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையாளர்களின் அடிமையாக சேவகம் செய்ய நினைக்கின்ற நீங்கள், நீதியரசர் அஞ்சலி செலுத்தியமை பற்றி பேசக் கொஞ்சமேனும் அருகதை உண்டா?

தன் கொள்கையை எடுத்துரைத்து, தமிழரின் நீதிக்கான பயணத்தை தொடரும் விக்னேஸ்வரனை நீங்கள் எதிர்ப்பதன் அர்த்தம் என்ன? முள்ளிவாய்க்காலுக்கான நீதியை கிடைக்காமல் செய்து,  இனவழிப்பாளர்களை பாதுகாப்பதா?

ஊடகம் என்ற பெயரில் நீங்கள் நடத்துவது மிகவும் கேவலமான செயல் மாத்திரமல்ல, இது ஊடக விபச்சாரம். வயது முதிர்ந்த ஓர் அரசியல் தலைவரை, வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, நாட்டின் நீதியரசராக இருந்த ஒருவரை ஒருமையிலும் – மிகவும் அவமதிக்கும் வகையிலும் உங்கள் ஊடகம் செயற்பட்டிருப்பது மிகவும் கேவலமான செயல் மாத்திரமல்ல. சட்ட ரீதியாக பெரும் தண்டனைக்கும் நடவடிக்கைகக்கும் உரிய அணுகுமுறையாகும். மனிதப் பண்புக்கும் மாண்புக்கும் எதிரான செயல். நாகரிகமற்ற விலங்குத் தனமான ஓர் அணுகுமுறையே இது. இதன் மூலம் நீங்கள் நீதியரசரை கேவலப்படுத்தவில்லை. உங்களை நீங்களே கேவலப்படுத்தியுள்ளீர்கள்.

உங்கள் அரசியல் என்ன? உங்கள் அணுகுமுறை என்ன? என்பதை நீங்களே மக்களுக்கு நன்றாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். பச்சோந்தித்தனமும் துரோகமும் கொண்ட உங்கள் முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர். உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நல்ல பிரதியுபகாரத்தை இதன் மூலம் செயதுள்ளீர்கள். இதற்கான பதிலை காலம் உங்களுக்கு அளிக்கும். இத்தகைய கேவலமான அரசியல் அணுகுமுறை கொண்டவர்களை ஈழத் தமிழினம் ஒருபோதும் மன்னிக்காது என்பதை காலம் உணர்த்தும். அது நிச்சயம் வெகு தூரத்தில் இல்லை…!

தமிழ்க் குரலுக்காக சிரித்திரன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)