“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரும் ஐக்கிய தேசியக் கட்சியினரும்தான் ஒப்பந்தம் வைத்து செயற்பட்டு வருகின்றனர் – தனித்து ஆட்சி அமைப்பதே இலக்கு என்கிறார் சஜித்

sajith 6
sajith

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரும் ஐக்கிய தேசியக் கட்சியினரும்தான் ஒப்பந்தம் வைத்து செயற்பட்டு வருகின்றனர். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசுடனோ அல்லது எந்தக் கட்சியுடனுமோ ஒப்பந்தம் வைத்துச் செயற்படவில்லை, பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைப்பதே எமது இலக்காகும். என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் அரசுடன் ஒப்பந்தம் வைத்துள்ளார்கள். இவர்கள் மக்கள் மத்தியில் அரசை விமர்சித்துக் கொண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னர் அரசுடன் இணைந்துகொள்ளவே முயற்சிக்கிறார்கள்’ என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்றுமுன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். தயாசிறியின் இந்தக் கருத்துக்குப் பதில் வழங்கும்போதே சஜித் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொதுத்தேர்தலையொட்டி நாட்டு மக்கள் எமது கட்சியின் பின்னால் அணிதிரண்டு வருகின்றார்கள். இந்தநிலையில், எமது கட்சியின் வாக்கு வங்கியைச் சிதறடிப்பதில் ஐக்கியக் தேசியக் கட்சியினரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரும் குறியாக உள்ளனர். இவ்விரு கட்சிகளும் பல வழிகளில் ‘டீல்’ வைத்துச் செயற்பட்டு வருகின்றனர். எமது கட்சியின் வாக்கு வங்கியை உடைப்பதற்காகவும் இவர்கள் ‘டீல்’ வைத்து பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களின் இந்தச் சதிக்குள் நாம் சிக்கமாட்டோம். நாட்டு மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் பின்னாலே நிற்கின்றார்கள். பொதுத்தேர்தல் வெற்றி இதைப் பறைசாற்றும்” – என்றார்.