கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் பிரிட்டன் வெற்றிபெறும்- எலிசபெத் மகாராணி உறுதி

queen elizabeth 1
queen elizabeth 1

கொரோனா வைரசிற்கு எதிரான போரில் ஐக்கிய இராச்சியம் வெற்றிபெறும் என எலிசபெத் மகாராணி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவது பாரிய பாதிப்பினை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலினால் பிரித்தானியா பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பாக பிரித்தானிய முடிக்குரிய மகாராணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உரை நிகழ்த்தினார்.

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள விதிமுறைகளை பின்பற்றி வீடுகளில் இருப்பதற்காக மக்களிற்கு நன்றியை தெரிவித்துள்ள அவர் ஏனையவர்களிற்கு உதவி செய்பவர்களையும் பாராட்டியுள்ளார்.

கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தின் முக்கிய பணியாளர்களிற்கும் நன்றி தெரிவித்துள்ள அவர் ஒவ்வொரு மணித்தியால பணியும் எங்களை இயல்பு வாழ்க்கையை அருகில் இட்டுச்செல்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் முன்னர் பல சவால்களை சந்தித்துள்ளபோதும் இது வித்தியாசமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை நாங்கள் உலகின் அனைத்து நாடுகளுடனும் பொதுவான நோக்கமொன்றிற்காக இணைந்துள்ளோம், விஞ்ஞானத்தின் பாரிய முன்னேற்றங்களையும், குணப்படுத்துவதற்கான எங்கள் உள்ளாந்த உணர்வையும் பயன்படுத்துகின்றோம்-இந்த வெற்றி எங்கள் அனைவருக்கும் உரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இன்னமும் நெருக்கடிகளை சந்திக்கவேண்டியிருக்கும் ஆனால் சிறப்பான நாட்கள் மீண்டும் வரும் என்பது குறித்து நாங்கள் நிம்மதியடையவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நண்பர்களுடனும் எங்கள் குடும்பத்தவர்களுடனும் மீண்டும் இணைவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக தனிமைப்படுத்தல் காரணமாக தாங்கள் நேசிப்பவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள துயரமான நிலை இரண்டாம் உலக யுத்தத்தின் போது குழந்தைகள் சிறுவர்கள் சந்தித்த அனுபவத்தை நினைவுபடுத்துகின்றது என எலிசபெத் மகாராணி தெரிவித்துள்ளார்.

வீடுகளில் இருக்குமாறு விடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றும் அனைவரும் பலவீனமான நிலையில் உள்ளவர்களை பாதுகாப்பதற்கு உதவுகின்றனர், தங்களின் அன்புக்குரியவர்களை இழந்ததால் பல குடும்பங்கள் அடைந்துள்ள துயரத்தினை ஏனையவர்களும் எதிர்கொள்வதை தடுக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எலிசபெத் மகாராணியின் குறித்த உரையானது அவரது 68 ஆண்டுகால ஆட்சி காலத்தில் ஐந்து தடவைகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்ட உரைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.