சற்று முன்
Home / உலகம் / ஜோ பிடன் வெற்றி பெற வேண்டும் என்றே சீனா ஆசைப்படுகின்றது

ஜோ பிடன் வெற்றி பெற வேண்டும் என்றே சீனா ஆசைப்படுகின்றது

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், வெற்றி பெற வேண்டும் என்றே சீனா ஆசைப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில், சீனாவுக்கும், ட்ரம்ப்புக்கும் வெளிப்படையான வார்த்தைப் போர் உச்சத்தை எட்டி வருகின்ற நிலையில், இந்த விடயத்தினை ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், ‘அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், தூங்கி வழியும் ஜோ பிடன் தான் வெற்றி பெற வேண்டும் என, சீனா ஆசைப்படுகிறது.
அதற்காக, சீனா ஒரு பெரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவை அவர்களால் எளிதில் துண்டிக்க முடியும். நான் பதவிக்கு வருவதற்கு முன்பிலிருந்து பல ஆண்டுகளாக சீனா இதைத்தான் செய்து வருகிறது’ என பதவிட்டுள்ளார்.

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) விவாகாரத்தில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகின்றது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, வைரஸ் தொற்று பரவியதற்கு சீனாவே காரணம் என கருதுகின்றது. இதனால் சீனா மீது ஜனாதிபதி ட்ரம்ப் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திவருகிறார். இந்த பின்னணியை கருத்திற்கொண்டே ட்ரம்ப் இந்த கருத்தினை கூறியுள்ளார்.

முன்னதாக, தனது அரசியல் போட்டியாளர் ஜோ பிடன் மீது, ஊழல் தொடர்பான விசாரணை நடத்தும்படி உக்ரேனைக் கேட்டுக்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டைத் ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

x

Check Also

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 377 இறப்பு

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 377 இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் ...