பெருவில் அவசரகால நிலையும், நாடு தழுவிய முடக்க நிலையும் அமுல்

t 5
t 5

பெரு தனது அவசரகால நிலையையும், நாடு தழுவிய முடக்க நிலையையும் எதிர்வரும் ஜூன் மாதம் இறுதி வரை நீடித்துள்ளது.

பெருவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், ஜனாதிபதி மார்ட்டின் விஸ்கார்ரா நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்தார். இது உலகில் கட்டாய தனிமைப்படுத்தலின் மிக நீண்ட காலங்களில் ஒன்றாகும்.

மார்ச் நடுப்பகுதியில் முடக்கநிலையை அறிவித்த பெரு, ஜூன் 30ஆம் திகதியை எட்டும் போது மூன்று மாதங்களுக்கும் மேலாக முடக்க நிலையை அறிவித்த முதல் நாடாக பெயர் பெறும்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் மிகப்பெரிய அழிவினை எதிர்கொண்ட இத்தாலி, ஸ்பெயின் மற்றும் சீனா போன்ற சில நாடுகளின் முடக்கநிலையின் கால எல்லையை இது மீறுகின்றது.

பெருவின் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுகள் எண்ணிக்கை 111,698ஆக உள்ளது. மொத்தம் இதுவரை 3,244பேர் உயிரிழந்துள்ளனர்.

இது லத்தீன் அமெரிக்காவின் இரண்டாவது அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாகும்.