ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழப்பு!

5 h 0
5 h 0

ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு சுகோட்கா பிராந்தியத்தில், இராணுவ ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இராணுவ மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டைக் கொன்ற குறித்த ஹெலிகொப்டர் அனாடிருக்கு அருகிலுள்ள சுகோட்காவில் உள்ள பிரதான விமான நிலையத்திற்கு அருகாமையிலேயே, இன்று   விபத்துக்குள்ளானது.

குறித்த மி-8 ஹெலிகொப்டர் விபத்தில் மூன்று பணியாளர்கள் மற்றும் விமானத்தில் இருந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர் உயிரிழந்ததாக சுகோட்காவின் ஆளுநர் ரோமன் கோபின் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப செயலிழப்பால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாரத்தில் இராணுவ மி-8 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். முன்னதாக மே 19ஆம் திகதி மாஸ்கோவிலிருந்து 90 கிலோமீட்டர் (56 மைல்) தொலைவில் உள்ள கிளின் நகரத்திற்கு அருகே மி-8 ஹெலிகாப்டரொன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

மி-8 என்பது ஒரு பல்நோக்கு, நடுத்தர இரட்டை விசையாழி ஹெலிகொப்டர் ஆகும். இது முதலில் சோவியத் ஒன்றியத்தில் வடிவமைக்கப்பட்டு இப்போது ரஷ்யாவால் தயாரிக்கப்படுகிறது. இது ரஷ்ய ஆயுதப்படைகளில் மிகவும் பொதுவான ஹெலிகொப்டர்களில் ஒன்றாகும்.