கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்பு கொலை என உறுதி செய்யப்பட்டள்ளது.

George Floyd
George Floyd

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்பு கொலை என அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹென்னெபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்தவரின் உடலில் இதய நோய் மற்றும் சமீபத்திய போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்து நசுக்கப்பட்டதால், அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மின்னாபொலிஸ் என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கறுப்பின இளைஞர் ஒருவரை பொலிஸார் தாக்கியதில் அந்த இளைஞர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, குறித்த அமெரிக்க பிரஜை இருதய நோயினால் உயிரிழந்ததாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்பு கொலை என அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டி வடக்கு கரோலினா, நியூயோர்க், லொஸ் ஏஞ்சலிஸ் மான்ஹாட்டன் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் அமெரிக்காவில் 75 நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக 40இற்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஊரடங்கு உத்தரவை மீறி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, இதன் காரணமாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.