கொரோனா பீதியால் முழங்கையால் ‘லிப்ட்’களை பயன்படுத்துபவர்கள் அதிகரிப்பு!

lift
lift

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முழங்கை உதவியோடு ‘லிப்ட்‘களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கொரோனாவில் இருந்து தப்பிக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட அரசு வகுத்த பல்வேறு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி வருகிறார்கள். அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள், வணிக வளாகங்ளில் ‘லிப்ட்’களை (மின்தூக்கி) அதிகமானோர் பயன்படுத்துவதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

‘லிப்ட்’களின் மூலமாக கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு கொடுக்காத வகையில் தங்கள் அணுகுமுறைகளை மக்கள் இப்போது பயன்படுத்துவதற்கு தொடங்கி இருக்கிறார்கள். அதாவது எந்த தளத்துக்கு செல்லவேண்டும் என்பதை விரல்களின் மூலமாக பொத்தானை அழுத்தி தான் பெரும்பாலானோர் தொடுவார்கள். இதனால் கொரோனா தொற்று பரவிவிடும் என்ற அச்சம் இருந்தது. ஆனால் தற்போது பெரும்பாலானோர் நூதனமாக முழங்கை மூலமாக ‘லிப்ட்’களை பயன்படுத்துவதற்கு தொடங்கி இருக்கிறார்கள்.

கைகளோடு ஒப்பிடுகையில் முழங்கை பகுதியின் பயன்பாடு குறைவு என்பதால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல சிலர் தொற்று ஏற்படாதவாறு துண்டு காகிதங்களை விரல்களில் வைத்தும் ‘லிப்ட்’ பொத்தானை அழுத்துகிறார்கள். கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அனைத்து வழிகளையும் மக்கள் தற்போது பின்பற்ற தொடங்கியிருக்கிறார்கள்.

இதுகுறித்து முழங்கையை பயன்படுத்தி ‘லிப்ட்’களை பயன்படுத்துபவர்கள் கூறுகையில், நாம் நம்முடைய கைகளை பொருட்கள் எடுப்பதற்காகவும், நம்முடைய உடலின் பிற பகுதிகளை தொடுவதற்கும் பெரும்பாலும் பயன்படுத்துவோம். இதனால் கொரோனா வைரசை தொட்டால், அது நம்முடைய உடம்பின் மற்ற பகுதிகளில் ஒட்டிக்கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது.

ஆனால் முழங்கையின் பயன்பாடு மிகவும் குறைவு. முழங்கை உதவியோடு ‘லிப்ட்‘ பொத்தானை அழுத்தி செல்லும்போது, கொரோனா வைரஸ் ஒட்டிக்கொண்டாலும், முழங்கையை நாம் வேறு எந்த உபயோகத்துக்காகவும் பயன்படுத்தாததால் மேலும் அதனை பரவ விடாமல் தடுத்து விடலாம். நாம் சுதாரித்துக்கொண்டால் கொரோனா தொற்றில் இருந்து எளிதில் தற்காத்துக்கொள்ளலாம் என்றனர்.