தேர்தலில் போட்டி – மனித உரிமை ஆணைக்குழு பதவியைத் துறந்தார் அம்பிகா!

.jpg
.jpg

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக, சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினராகப் பதவி வகித்த அம்பிகா சற்குணநாதன் அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளராக அடையாளப்படுத்தப்படும் அம்பிகா சற்குணநாதன், 2015இல் நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கு வந்தவுடன் மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவராகச் செயற்படும் அம்பிகா சற்குணநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் ஆகியோர், தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட வைப்பதற்காக கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியில் பல காலமாக உறுப்பினர்களாக இருந்து கட்சிப் பணி ஆற்றிவரும் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களை தமிழரசுக் கட்சியின் இந்த ‘இறக்குமதி அரசியல்’ விசனமடையச் செய்துள்ளது.

இது மட்டுமல்லாமல் தமிழரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படும் கைதடியைச் சேர்ந்த தபேந்திரன் ஈபிடிபி உறுப்பினராக இருந்தவர் என்பதும் மட்டக்களப்பைச் சேர்ந்த சாணக்கியன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளரகச் செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.