சுன்னாகம் தவிசாளரின் அவசர அறிவிதல்

FB IMG 1585147312409
FB IMG 1585147312409

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளானவர் எமது வலி தெற்கு பிரதேச சபை எல்லைக்குள் வசித்து வருவதனால் நோய்தொற்றை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்திற்கு எமது சபைக்கும் பாரிய கடப்பாடு உள்ளது.

எனவே எமது மக்களின் நலன்பேணும் நோக்கில் பல்வேறுபட்ட காத்திரமான நடவடிக்கைகளை எனது நேரடிக் காணிப்பில் பிரதேச சபை மேற்கொள்ளவுள்ளது.

கடந்த ஊரடங்கு தளர்வின் போது எமது பொதுச்சந்தைகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சனநெரிசல் இருந்தமை கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடிய ஏதுநிலையை உண்டாக்கும் என்று சுகாதார தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான சனநடமாட்டத்தையும் நெருசலையும் குறைப்பதற்கு நாம் சுகாதாரத் துறையினருடனும் பாதுகாப்புத் தரப்பினருடனும் இணைந்து சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

அதன்படி ஊரடங்கு அமுலில் இருக்கின்ற போதே எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு கிராமங்கள் தோறும் பொலிஸாரின் அனுமதியுடம் சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் கிராமச் சந்தைகள் அமைக்கப்படவுள்ளது.

எனவே அத்தியாவசிய பொருட்கள் தேவையானவர்கள் மட்டும் குறித்த சந்தைகளுக்கு சென்று மரக்கறிகள் மற்றும் பலசரக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

இன்று முதல் கிராமச் சந்தைகள் இயங்க ஆரம்பிக்கும். சந்தைகள் இயங்கவுள்ள இடங்கள் பற்றி எமது சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் முழுவதுமாக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களான கையுறை மற்றும் முக கவசம்(மாஸ்க்) அணியாமல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எனக்கு அல்லது பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் உடனடியாக முறையிடுங்கள்.

அதுமட்டுமின்றி உங்கள் பகுதிகளில் மேலதிக அத்தியாவசிய வசதிகளோ சுகாதார வசதிகளோ ஏற்படுத்தப்பட வேண்டியேற்பட்டால் உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

வலி தெற்கு பிரதேச மக்கள் என்ற ரீதியில் நாம் அனைவரும குறிப்பிட்ட நாட்களுக்கு எமது வீடுகளை விட்டு வெளியேறாமல் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றேன்.
க.தர்ஷன்
தவிசாளர்
வலி தெற்கு பிரதேச சபை
சுன்னாகம்.