டெங்கு தீவிரம் 73601 பேர் பாதிப்பு !!

ad 1
ad 1

நாடளாவிய ரீதியில் இதுவரையில் சுமார் 73 ஆயிரத்து 601 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக டெங்கு நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் மொத்தமாக 51 ஆயிரத்து 659 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தனர். ஆனால், இவ்வருடம் இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

மேல் மாகாணத்தில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 46.5 சதவீதத்தால் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதுடன், கொழும்பு மாவட்டத்திலேயே இந்நோய் பரவும் அபாயம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் டெங்கு நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வருடம் மாத்திரம் 15 ஆயிரத்து 632 பேர் வரை, கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். டெங்கு நோய்த் தாக்கம் மேலும் அதிகரித்துச் செல்வதனைத் தடுப்பதற்காக, சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாத்திரம் இவ்வருடத்தின் இது வரையான காலப்பகுதியில், 2 ஆயிரத்து 934 பேரும், கொழும்பின் ஏனைய பகுதிகளில் 12 ஆயிரத்து 698 பேரும், டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன், கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 391 பேரும், கொழும்பின் ஏனைய பகுதிகளில் 2 ஆயிரத்து 23 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் மாதத்தில் 11 ஆயிரத்து 213 பேரே டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தனர். ஆயினும், நவம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 10 ஆயிரத்து 273 பேர் வரையில் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதன்பிரகாரம், நவம்பர் மாதத்தில் கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 414 பேரும், கம்பஹா மாவட்டத்தில் ஆயிரத்து 17 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 695 பேரும், கண்டி மாவட்டத்தில் ஆயிரத்து 468 பேரும், டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், டெங்கு நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.