இராணுவ பயிற்சி: அரசின் மோசமான பாசிச போக்கின் வெளிப்பாடு – எதிர்க்கட்சி கடும் விசனம்

நாணயக்கார 720x380 1
நாணயக்கார 720x380 1

ஜனநாயகத்தின் பிரதான விடயமாகக் காணப்படும் பேச்சு சுதந்திரத்தை முடக்க முயற்சிக்கும் அரசாங்கம் , எதிர்வரும் காலங்களில் நாட்டில்  பாசிசவாத இராணுவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கான முன்னேற்பாடாக 18 வயதிற்கும் மேற்பட்டோருக்கு இராணுவ பயிற்சி வழங்க தீர்மானித்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 18 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

அனைத்து வழிகளிலும் தோல்வியடைந்துள்ள அரசாங்கம் தற்போது பேச்சு சுதந்திரத்தையும் ஒழிக்க முயற்சிக்கிறது. ஜனநாயக ரீதியாக முன்னோக்கி பயணிக்க வேண்டிய நாட்டில் பேச்சு சுதந்திரத்தை முடக்க முயற்சிக்க வேண்டாம் என்று ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறிருக்கையில் 18 வயதிற்கும் அதிகமானோருக்கு இராணுவ பயிற்சியளிக்க தயாராகவுள்ளதாக காவற்துறைக்கு பொறுப்பான அமைச்சர் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் நாட்டில் பாசிசவாத இராணுவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கிறது. சிவில் சமூகத்தில் இராணுவ பயிற்சியை வழங்க முயற்சிப்பதன் மூலம் அவர்களின் மனோபவத்தை மாற்ற முயற்சிக்கப்படுகிறது.

 ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களது பிரச்சினைகளை அறிந்து தீர்வினைப் பெற்றுக் கொடுப்போம் என்று தேர்தல் காலத்தில் சஜித் பிரேமதாச கூறினார். இதனை ஆளுந்தரப்பு கடுமையாக விமர்சித்தது. ஆனால் தற்போது அந்த யோசனையை ஜனாதிபதி செயற்படுத்திக் கொண்டிருக்கிறார். 

இதே போன்று பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார பாதுகாப்பு துவாய் தொடர்பான யோசனை முதன்முறையாக எதிர்க்கட்சி தலைவரால் முன்வைக்கப்பட்டது.

அப்போது அதனை விமர்சித்தவர்கள் இப்போது அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இது மகிழச்சிக்குரியது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை என்று நிதி அமைச்சர் கூறினாலும் கடனை மீளச் செலுத்த வேறு வழியில்லை என்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்பதே என்று அமைச்சரொருவர் கூறுகிறார். 

எவ்வாறிருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக முயற்சி செய்யாமல் கடனை செலுத்துவதற்காக தேசிய சொத்துக்களை அந்நியர்களுக்கு விற்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நல்லாட்சி அரசாங்கம் செய்ததை செய்வதற்காகவா இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது? நல்லாட்சி அரசாங்கத்தின் போது வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு வழங்கிய அபிவிருத்திகளையும் மீட்பதாகக் கூறியே அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் தற்போது தேசிய சொத்துக்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறது என்றார்.