அரசிடம் பின்கதவால் வாங்காமல் மக்களிடம் நிதி உதவி கேட்பது தவறல்ல!

cm suanthiran
cm suanthiran

தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழ விடுதலைப் போராட்டத்தை தொடங்கிய காலத்தில் மக்களிடம்தான் நிதி உதவிகளைப் பெற்றிருந்தனர். பணமாகவும் பொருளாகவும் மக்களும் தமது உதவிகளை வழங்கி ஈழ விடுதலைப் போராட்டத்தின்மீதான பற்றை வெளிப்படுத்தினர். ஆரம்ப காலத்தில் மாத்திரமின்றி பின் வந்த காலத்திலும் புலத்திலிருந்த மக்கள் வழங்கிய உழைப்பு களத்தில் போராட்டத்திற்கு கை கொடுத்தது.

பொதுவாக மக்களின் விடுதலையை மையப்படுத்திய போராட்ட இயக்கங்களும் வெகுசன போராட்ட அமைப்புக்களும் மக்களிடமே நிதி உதவிகளை கோருவதுண்டு. அதற்கு அடிப்படையான சில நியாயங்கள் இருக்கின்றன. எந்தவொரு போராட்டமும் மக்களால் நடாத்தப்படுகின்ற போராட்டமாக இருக்க வேண்டும். அரசுகளுக்கும் ஆக்கரமிப்பு, அடாவடி அமைப்புக்களுக்கும் எதிரான போராட்டத்தை மக்களின் மன, உடல் வலிமையால் மாத்திரமின்றி நிதி வலிமையாலும்தான் நடாத்த வேண்டும்.

வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் அண்மையில் அறிக்கை ஒன்றின் வாயிலாக நிதி உதவியினை கோரியிருந்தார். நிதிப் பலம் படைத்தவர்கள், தமது அரசியல் பயணத்திற்கு பங்களிக்க வேண்டும் என்றும் புலத்திலும் நிலத்திலும் உள்ள உறவுகளிடம் வெளிப்படையாக கேட்டிருந்தார். முன்னாள் முதல்வர்மீது அரசியல் காழ்ப்பு கொண்டவர்கள், இதனை விமர்சிப்பது மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது.

ஏனென்றால் புலத்தில் இருந்தும் நிலத்தில் இருந்தும் நிதி உதவிகளை பெற்றே அனைவரும் அனைத்து கட்சிகளும் அரசியல் செய்து வருகின்றன. இதனை விமர்சித்த இருவரை பார்ப்போம். திரு. சுமந்திரன் அதில் ஒருவர். அவருக்கும் அவருடைய அலுவலகத்தை அமைப்பதற்கும் புலத்திலிருந்து நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் புலத்தில் இருந்து பெருமளவான நிதியை பெறுகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் புலத்தில் இருந்து நிதியை பெற்று, தாம் வழங்குவது போல காட்டி அரசியல் செய்வதை நாம் கடந்த பத்தாண்டுகளாக பார்த்தே வருகிறோம். உண்மையில் விக்கினேஸ்வரன் அவர்கள், இந்த விடயத்தில் வெளிப்படையாக உதவியை கோரியுள்ளார். வழமையாக எல்லாவற்றையையும் மக்களுக்காக வெளிப்படையாகவே விக்கினேஸ்வரன் பேசுகிறார். அதுவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் சுமந்திரன் போன்றவர்களுக்கும் பெரும் பிரச்சினையாக இருந்தது. இதிலும் அதுவே நடந்திருக்கிறது.

தனது முதல்வர் பதவி பொறுப்பை உணர்ந்த காலத்தில் இருந்தே, வெளிப்படையாக உண்மையை வலியுறுத்துகிற அரசியலை விக்கினேஸ்வரன் வலியுறுத்தி வந்தார். அதுவே கட்சியில் உள்ளவர்களுக்கு பிடிக்காத செயலாகின. அதைப்போல இன்னொருவரும் விமர்சித்துள்ளார். அவர் ஊடகவியலாளர் வித்தியாதரன். அவர் புலத்தில் இருந்து யாரின் பெயரால் எதனையெல்லாம் பெறுகிறார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சுமந்திரனோ, தமிழ் தேசியக் கூட்டமைப்போ, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரோ இதுவரையில் புலம்பெயர் மக்களிடம் இருந்து பெற்ற நிதிக்கு கணக்கு காட்டியுள்ளனரா? தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் ஒரு சிலர் மாத்திரமே நிதியை பகிர்ந்துகொள்ளுவதாகவும் வேறு உறுப்பினர்களுக்கு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஆனால் முன்னாள் முதல்வர் நிதி அவசியமான விடயங்களுக்கு மாத்திரமே செலவிடப்படும் என்று கூறியதுடன் கிடைக்கும் நிதி உதவிகளுக்கு கணக்கு காட்டப்படும் என்றும் கூறியுள்ளார். முதன் முதலில் மக்களுக்கு கணக்கு காட்டுவேன் என்று கூறிய அரசியல் தலைவராகவும் விக்கி விளங்குகிறார்.

இத்தகைய நேர்மைகள் சுமந்திரன் போன்றோருக்கு கசப்பாகத்தான் இருக்கும். இதே சுமந்திரன் 2015 தேர்தலினை முன்னிட்டு புலத்தில் நிதி சேர்க்கும் பயணத்திற்கு அன்றைய முதல்வராக இருந்த விக்கினேஸ்வரன் வரவில்லை என்று குறைபட்டுக் கொண்டார். அதைப்போல சுமந்திரனுடன் பேச 250 டோலர் என்று விளம்பரம் செய்து புலத்தில் காசு வாங்கிவிட்டு இப்போது பிச்சைக் கதை பேசுவது மிகுந்த விந்தையாக இருக்கிறது.

உண்மையில் மக்களிடம் நிதி உதவி கோருவதில் தவறும் இல்லை. அதில் வெட்கப்படவேண்டியதுமில்லை. மாறாக அரசிடம் பின்கதவால் நிதியை  வாங்குவதே வெட்கமுற வேண்டியது. ஆக்கிரமிப்பு சக்திகளிடம் கை நீட்டுவதே வெட்கத்திற்குரியது. அப்படி கோடிகளை பெறுபவர்கள், விக்கினேஸ்வரன்போல ஒரு நிதி நிலமையை அடைய வேண்டியதில்லை. விக்கினேஸ்வரன் கொள்கை விடயத்தில் மாத்திரமின்றி, நிதி விடயத்திலும் மக்களை அடிப்படையாக கொண்டு தன் அரசியல் போராட்டத்தை நடாத்துகிறார் என்பதும் விக்கினேஸ்வரனின் தனித்துவமான பயணம் எப்படியானது என்பதும் இங்கே புலப்படுகிறதல்லவா?

தமிழ்க்குரலுக்காக தாயகன்