2681 வீடுகள் அரைகுறையில். கட்டி முடிக்க 1245 மில்லியன் தேவை-மாவட்ட வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர்

j 1
j 1

கடந்த ஆட்சிக்காலத்தில் வீடமைப்பு நீர்மாண அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவால் அனைவருக்கும் வீடு எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட மாதிரி வீட்டுத்திட்டங்களிற்கான மிகுதி பணம் வழங்கப்படாமையால் வீடுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக கடந்த 2017, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அதிகார சபையூடாக 140 மாதிரி கிராமங்களிற்காக 4167 பயனாளர்கள்(வீடுகள்) தெரிவு செய்யப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

2017 இல், 15 மாதிரி கிராமங்களிற்கும், 2018ஆம் ஆண்டு 68 மாதிரி கிராமங்களுக்கும், 2019ஆம் ஆண்டு 58 மாதிரி கிராமங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அடிக்கல் நாட்டப்பட்ட வீடுகளில் 1486 வீடுகளின் பணிகளே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 2681. வீடுகள் முழுமைப்படுத்தப்படாத நிலையில் அரைகுறையில் உள்ளது.

குறித்த திட்டத்திற்கான நிதி வழங்கல் நடவடிக்கைகள் படிமுறைகளாக வழங்கப்பட்டு வீடமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதற்கான நிதி வழங்கல்கள் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்து புதிய ஆட்சி அமைக்கப்பட்டு பலமாதங்கள் கடந்த நிலையிலும் வீட்டுத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கான மிகுதி பணம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் வீடுகள் கட்டிமுடிக்கப்படாமல் அரைகுறையான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். நீண்டகாலமாக வீடுகள் இல்லாமல் தற்காலிக வீடுகளில் வசித்து வந்த நிலையிலேயே குறித்த வீடுகள் எமக்கு வழங்கப்பட்டது. தற்போது அது இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அரசின் பணமும், மக்களின் பணமும் வீணாகிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, எமது நிலையை கருத்தில் கொண்டு முன்னைய அரசால் உருவாக்கப்பட்ட குறித்த திட்டத்தினை பூர்த்தி செய்வதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் முன்வைக்கின்றனர்.

இது தொடர்பாக வவுனியா மாவட்ட வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் வி.எம்.வி.குரூஸிடம் வினவிய போது, வவுனியாவில் இதுவரை பூர்த்தி செய்யப்படாத குறித்த மாதிரி கிராமங்களுக்கு அண்ணளவாக 1246 மில்லியன் ரூபாய் பணம் இன்னும் தேவைப்படுகிறது. இது தொடர்பாக தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அவர்களால் நிதி வழங்கப்படும் பட்சத்தில் குறித்த திட்டம் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.