தமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் ?

பகுதி – 3

மூன்றாவது பகுதி தொடர்பில் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது ஒரு செய்தியை காண முடிந்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்து மூன்று மாதங்களாகின்றது. ஆனால் இந்த மூன்று மாதங்களில் கூட்டமைப்பிற்கான பேச்சாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் கூட்டமைப்பினர் தடுமாறுகின்றனர். டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பேச்சாளர் பதவியை தங்களுடைய கட்சிக்கு தரவேண்டுமென்று கூறுகின்றார். ஆனால் தமிழரசு கட்சியோ அது தங்களிடம்தான் இருக்க வேண்டுமென்று வாதிடுகின்றது. முடிவெடுக்க முடியாத சம்பந்தன் விடயத்தை காலவரையறையின்றி ஒத்திப்போடுகின்றாராம். ஒரு கட்சியின் பேச்சாளர் யார் என்பதைக் கூட ஒற்றுமையாக தீர்மானிக்க முடியாத கட்சிகளால் எவ்வாறு தமிழ்த் தேசியத்தை பாதுகாக்க முடியும்? 

கடந்த பகுதியில் இளைய தலைமுறையினரை தமிழ்த் தேசிய அரசியலுக்குள் உள்வாங்க வேண்டுமென்று வாதிட்டிருந்தேன். இந்தப் பகுதியில் அதனை எவ்வாறு செய்யலாம் என்பதை பார்ப்போம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மூத்த தலைவர்கள் என்பவர்கள் பலர் தோல்வியடைந்திருந்தனர். மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா என பலரும் இதில் அடங்குவர். இவர்கள் எவரும் அடுத்த ஆண்டு இடம்பெறப்போகும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது. இவர்கள் தமிழ்த் தேசியத்தை நேசிப்பது உண்மையாயின் இவர்கள் கட்டாயமாக மாகாண சபைத் தேர்தலில் பங்குகொள்ளக் கூடாது. தோல்வியடைந்தவர்கள் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் தமிழ்த் தேசிய வாக்குவங்கியை பலப்படுத்தவும் முடியாது.

ஏனெனில், இவர்கள் அனைவருமே மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். இவ்வாறானவர்கள் மீண்டும் மாகாண சபையில் போட்டியிட முற்பட்டால், மக்களால் இவர்கள் நிச்சயம் வரவேற்கப்படமாட்டார்கள். இவர்கள் நேர்மையானவர்கள் என்றால் – பதவி சுகங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றால் – இவர்கள் அனைவரும் நிச்சயம் இதனை செய்ய வேண்டும். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம்.

அவ்வாறாயின் இவர்களுக்கு பதிலாக யார் தேர்தலில் போட்டியிடுவது? இளைய தலைமுறையினர் என்பதுதான் இதற்கான பதில். 

தமிழ்த் தேசியத்தை தங்களின் கட்சிகளின் பெயர்களில் வைத்திருக்கும் ஒவ்வொரு தரப்பினரும் மகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஒரு கொள்கை நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதாவது, தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லை 25-50 ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும். இதில் 40 விகிதம் பெண்களுக்கு இடமளிக்கப்படவேண்டும். இதனை ஒரு தேர்தல் கொள்கையாக கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டும். அனுபவமுள்ள அரசியல்வாதிகள் என்போர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியலில் இரண்டு விடயங்கள் நிகழும். ஒன்று, இளம் தலைமுறையிலிருந்து இரண்டாம் மட்ட தலைவர்கள் உருவாகுவார்கள். இன்று தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் எவற்றிலும் இரண்டாம் மட்டத் தலைவர்கள் இல்லை. இரண்டாம் மட்டத் தலைவர்கள் இல்லாமல் ஒரு கட்சியை எவ்வாறு முன்கொண்டு செல்ல முடியும். முன்நோக்கி பயணிக்க முடியாதவொரு கட்சியால் எவ்வாறு தமிழ்த் தேசியத்தை பலப்படுத்த முடியும்?


இந்த விடயத்தில் கூட்டமைப்பிடம் அதிகம் எதிர்பார்க்க முடியுமா – கூட்டமைப்பில் இருக்கும் 70 வயதை கடந்தவர்கள் இதற்கு இணங்குவார்களா? ஏனெனில் வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தான் தான்என எண்ணிக் கொண்டிருக்கும் மவை சேனாதிராசா தலைவராக இருக்கும்போது, தமிழரசு கட்சியில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியுமா? நிச்சயமாக முடியாது.

ஆனால் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியினரும், விக்கினேஸ்வரன் தலைமை தாங்கும் கூட்டணியாலும் இதனை செய்ய முடியும். அதே போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாலும் இதனை செய்யலாம். பதவி மோகத்திற்குள் சிக்குப்படாத ஒரு அரசியல் வாதியென்னும் வகையில் விக்கினேஸ்வரன் இவ்வாறானதொரு புதிய அரசியல் கலாசாரத்திற்கு தலைமை தாங்க முடியும். ஏனெனில் எல்லாக் காலத்திலும் தாங்கள் மட்டுமே பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று எண்ணுபவர்களால், ஒரு போதுமே இவ்வாறான மாற்றங்களை செய்ய முடியாது. மாற்றங்களை ஏற்படுத்தாமல் தமிழ்த் தேசியத்தை பாதுகாக்க முடியுமா?


நாடாளுமன்ற தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் வெற்றிபெற்ற அங்கஜன் ராமநாதன் பலரது கண்ணையும் உறுத்தியிருந்தார். பலரும் அங்கஜனுடன் அணிதிரண்ட இளைஞர்கள் தொடர்பில் கவலைப்பட்டனர். எங்களுடைய இளைஞர்கள் திசைமாறிப் போகின்றனர் என முணுமுணுத்துக் கொண்டனர். உண்மையில் இளைஞர்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக செல்லவில்லை. உண்மையில் அவர்களுக்கு எது தமிழ்த் தேசிய அரசியல் – எது தமிழ்த் தேசியத்திற்கு எதிரான அரசியல் என்பதையே விளங்கிக்கொள்ள முடியவில்லை. அந்தளவிற்கு அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலிருந்து அன்னியப்பட்டிருக்கின்றனர். 


அவர்கள் எதனால் அன்னியப்பட நேர்ந்தது? தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் முதியோர் இல்லங்களாக இருந்தால் இளைஞர்கள் எவ்வாறு இந்த கட்சிகளின் பின்னால் வருவார்கள்? 


தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பில் ஒரு வரியில் கூறுவதானால், தமிழ்த் தேசிய அரசியல் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. 2009ற்கு முன்னர் மிக உச்சளவிலான ஆற்றலுடன் திகழ்ந்த தமிழ்த் தேசிய அரசியல் இன்று கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாகிவிட்டது. நடக்கவே முடியாதவர்கள் 100 மீட்டர் ஓடுவோம் என்கின்றனர். அதனை தமிழ் மக்கள் தேசியமென்று நம்பும் அவல நிலைமை உருவாகியிருக்கின்றது. எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லாமல் வெட்டியாக பேசுவதில் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கும் மூப்படைந்த தமிழ் அரசியல் தலைவர்கள் என்போரால் இனி எதனையும் நகர்த்த முடியாது. தமிழ்த் தேசிய அரசியல் முற்றிலும் இளைய தலைமுறையினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாது விட்டால் தமிழ்த் தேசிய அரசியல் அதன் வீரியத்தை இன்னும் சில வருடங்களில் முற்றிலுமாக இழந்துவிடும்.


நாம் இந்த விடயஙகளை சற்று பின்நோக்கி பார்க்க வேண்டும். 30 வருடங்களுக்கு முன்னர் நடந்தவைகள் என்ன? அப்போதிருந்த மிதவாதத் தலைவர்கள் என்போர் எதையும் செய்வதற்கு ஆற்றலற்றவர்கள் என்பதை கண்டுகொண்ட போதே இளைஞர்கள் அரசியலை தங்கள் தோள் மீது சுமக்கத் தொடங்கினர். மிதவாதிகளை முற்றிலுமாக அரசியலிருந்து ஒதுக்கினர். இளைஞர்கள் அரசியலை கையில் எடுத்த பின்னர்தான் தமிழ் அரசியலின் முகம் சடுதியாக மாறியது. தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சியுற்றது. பிராந்திய சக்தியான இந்தியாவின் பார்வை இலங்கைத் தீவின் மீது பட்டது. உலகின் பார்வை தமிழர் மீது திரும்பியது. ஆனால் 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் தமிழ் அரசியல் பழைய மொந்தையில் புதிய கள் என்பது போல் ஆனது. மீண்டும் காலாவதியாகிப் போன முகங்கள் மட்டுமே தெரிகின்றன. 


யுத்தம் நிறைவுற்று 11 வருடங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் இவர்களால் தமிழ்த் தேசிய அரசியலில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இவ்hகளால் தமிழ்த் தேசிய அரசியலை பலப்படுத்த முடியாவிட்டாலும் கூட, அதனை மன்னிக்கலாம் ஆனால் இவர்களால் தமிழ்த் தேசியம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் வீரியத்தை இழந்து செல்லும் போது, நாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? இவர்கள் மட்டும்தான் இனியும் தமிழ் அரசியலில் கோலோச்சப் போகின்றார்கள் என்றால் அப்படியொரு அரசியல் தமிழ் மக்களுக்கு தேவையற்ற ஒன்றாகவே இருக்க முடியும். ஒரு ஆற்றல் வாய்ந்த புதிய தலைமுறை இந்த அரசியலுக்குள் வராவிட்டால் தமிழ்த் தேசியத்தை பாதுகாக்கவே முடியாது. 


இந்த அடிப்படையில் கடந்த மூன்று பகுதியாக வெளியான கட்டுரைகளையும் தொகுத்து நோக்கினால் பின்வரும் முடிவுகளுக்கு நாம் வரமுடியும். தமிழ்த் தேசியத்தை பாதுகாக்க வேண்டுமாயின் பின்வரும் விடயங்கள் நடந்தேயாகவேண்டும். அவைகள் பின்வருவமாறு…


1. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த மூத்த அரசியல்வாதிகள் என்போர் எவரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது. இதனை ஒரு கொள்கை நிலைப்பாடாக கட்சிகள் அறிவிக்க வேண்டும்.

 2. வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவின் போது 25-50 வரையிலான வயதுடைவர்கள் மட்டுமே வேட்பாளர்களாக உள்வாங்கப்பட வேண்டும். இதன் மூலம் புதியதொரு தலைமுறை தமிழ்த் தேசியஅரசியலுக்குள் உள்வருவதற்கான சுழல் உருவாகும். இதன் விளைவாக இரண்டாம் மட்டத் தலைவர்கள் உருவாகுவார்கள். 


3. கட்சிகளில் இருக்கும் மூத்த அரசியல்வாதிகள் என்போர் இளைய தலைமுறையினரின் வருகைக்கு முட்டுக்ட்டை போட்டால், தமிழ் சமூகத்திலுள்ள சிவில் சமூக அமைப்புக்கள், புத்திஐPவிகள், பல்கலைக்கழக மாணவர் சமூகம், சமூகமட்டத் தலைவர்கள், கிராமிய அமைப்புக்கள், மீனவர் சங்கங்கள் இவ்வாறு பல சமூக அமைப்புக்களும் ஒரணியாக திரண்டு கட்சிகளின் முடிவை எதிர்க்க வேண்டும். கட்சிகளின் தலைமையை அரசியலிலிருந்து வெளியேறுமாறு கோர வேண்டும். இதனை ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகவே முன்னெடுக்க வேண்டும். 


4. மாகாண சபைத் தேர்தலின் போது, முடியுமானவரையில் அனைத்து தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளையும் ஓரணியில் போட்டியிடுமாறு கோர வேண்டும். இதனை ஒரு சமூக அபிப்பிராயமாக மாற்ற வேண்டும். சமூக அபிப்பிராயத்தை உதாசீனம் செய்யும் அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் தேர்தலிலிருந்து ஒதுங்கிநிற்குமாறு வலியுறுத்த வேண்டு;ம். இது ஒரு சமூக அபிப்பிராயமாக மாறுகின்ற போது, கட்சிகளால் ஒரு கட்டத்திற்குமேல் இதனை எதிர்க்க முடியாமல் போகும். அவர்கள் வழிக்கு வருவார்கள். இதனை இப்போதே தொடங்க வேண்டும். 

-விதுரன்