நாட்டின் முக்கிய பகுதிகளை குத்தகைக்கு விடுவது இறையாண்மைக்கு ஆபத்தாகாதா? – சுரேஷ் பிரேமச்சந்திரன்

555 2
555 2

இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகளை தொண்ணூற்றொன்பது வருட குத்தகைக்கு விடுவதும் விலைபேசி விற்பதும் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தாகாதா என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார் .

இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றில் இந்த கேள்வியினை எழுப்பியுள்ளார்.

குறித்து அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அந்த தேசிய இனத்திற்கு எதிராக ஒரு பாரிய யுத்தத்தை நடாத்தி, பல்லாயிரக்கணக்கான மக்களையும் போராளிகளையும் கொலை செய்து, பல்லாயிரம் கோடி சொத்திழப்புக்களை உருவாக்கி, இன்று பொருளாதார வங்குரோத்திற்குச் சென்று, சர்வதேச நாடுகளின் விளையாட்டுக் களமாகத் தன்னை மாற்றி செயற்படுவதானது “உள்ளங்கையில் ஏற்பட்ட காயத்திற்கு களிம்பு பூசி ஆற்றுவதை விடுத்து, இதயத்தில் சத்திர சிகிச்சை” மேற்கொண்டதன் விளைவாகும்.

தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை ஒன்றுபட்ட இலங்கைத் தீவிற்குள் தீர்ப்பதற்கு ஒரு சமஷ்டி அமைப்பினூடாக அதனைச் சாத்தியமாக்கலாம் என்று தமிழ்ப் பிரதிநிதிகள் கூறும் போது அது இலங்கையின் இறையாண்மைக்கு பேராபத்தாக அமைந்துவிடும் என்று குரல் கொடுக்கும் சிங்கள தரப்புக்கள் இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகளை தொண்ணூற்றொன்பது வருட குத்தகைக்கு விடுவதும் விலைபேசி விற்பதும் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தாகாதா என்பதை சிங்கள பெரும்பான்மை மக்கள் உள்ளிட்ட இந்நாட்டு மக்கள் அனைவரும் உணர வேண்டும்.

இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களை சீன அரசாங்கத்திற்கு தொண்ணூற்றொன்பது ஆண்டுகள் குத்தகைக்குக் கொடுப்பதென்பதும் இதனால் அண்டை நாடுகளுக்கு ஆபத்தில்லை எனக் குறிப்பிடுவதும் சிறுபிள்ளைத்தனமானது எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.