தேர்தலைப் பிற்போடுவதை ஏற்கவே முடியாது! – விமல் ஆவேசம்

vimal weerawansha 2014
vimal weerawansha 2014

தேர்தல் மீது மக்களுக்கு அக்கறையில்லை என்று கூறிவிட்டு தேர்தலைப் பிற்போடுவது அப்பட்டமான ஜனநாயக மீறல் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

‘பொதுமக்களில் பெரும்பாலானோருக்கு தேர்தல் அரசியல் மீது தற்போது நம்பிக்கையில்லை’ என்று நுவரெலியா கிராண்ட் ஹொட்டலில் நடைபெற்ற தேசிய சட்ட மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் விமல் வீரவன்ஸவிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தலைக் கண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவர் தலைமையிலான மொட்டு அரசும் அஞ்சி ஓடுகின்றமை ஜனாதிபதியின் உரையிலிருந்து வெளிப்படையாகத் தெரிகின்றது. மக்களின் ஆணையை இழந்த அரசால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது.

நிலையான அரசு ஒன்று இருந்தால் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சமாந்தரநிலைக்கு வரும். எனவே தேர்தல் ஒன்று மிகவும் அவசியம். தேர்தல் மீது மக்களுக்கு அக்கறையில்லை என்று கூறிவிட்டு தேர்தலைப் பிற்போடுவது அப்பட்டமான ஜனநாயக மீறல்.” – என்றார்.