இலங்கை விரைவில் சீனாவின் காலனியாக மாறிவிடும் – விஜேதாச ராஜபக்ச

நாடு தற்போது செல்வது போன்று சென்றால் இன்னும் சில வருடங்களில் இலங்கை நிச்சயமாக சீனாவின் காலனியாக மாறிவிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சீனாவின் காலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிராக இலங்கையை அமெரிக்காவின் காலனியாக மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக அமெரிக்க தூதுக்குழு விரைவில் இலங்கை வரவுள்ளது.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் என்பது இலங்கையை சீனாவின் காலனியாக மாற்றுவதற்கு எதிராக அமெரிக்காவின் காலனியாக மாற்றுவதற்கான சதித்திட்டம் என கூறிய அவர்; நாட்டை பாதுகாக்கவே மக்கள் நம்பிக்கையுடன் ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் நாட்டை ஒப்படைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

எனினும் இவர்கள் நாட்டை காட்டிக்கொடுப்பார்கள் என்றால் மக்கள் அப்பாவிகளாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். மக்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பத்திற்கு செல்வார்கள் எனவும் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.