சட்ட விரோத அச்சகத்தை நடத்திய நபர் கைது!

IMG 20191021 WA0026 1024x922 1
IMG 20191021 WA0026 1024x922 1

பொரளை பகுதியில் சட்ட விரோத அச்சகம் ஒன்றை நடத்திச் சென்றதாக கைது செய்யப்பட்ட நபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது,

பொரளை பகுதியில் மேல்மாகாணத்தின் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத அச்சகம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகபூர்வ ஆவணங்களை பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது பொரளை – கஜபாபுர பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர் தனது வீட்டின் மேல் மாடியிலேயே இந்த அச்சகத்தை நடத்திச் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த அச்சகத்திலிருந்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 23 பேருக்கு சொந்தமான உத்தியோக பூர்வ இறப்பர் முத்திரைகளும் , பல்வேறு பகுதிகளிலும் உள்ள சமாதான நீதிவான்களுக்கு சொந்தமான 43 இறப்பர் முத்திரைகளும் , 5 சட்டவிரோத சாரதி அனுமதிப்பத்திரங்களும் , வருமான அனுமதிப்பத்திரம் , விவசாய பணிப்பாளர் நாயகத்தின் இறப்பர் முத்திரை , மோட்டார் வாகன ஆணையாளரின் இறப்பர் முத்திரை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை பிறப்பு சான்றிதழ்கள் , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யும் மாதிரி அறிக்கைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் பொரளை பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் , அவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொரளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியால் மேற்கொள்ளபட்டு வருகின்றது.