விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை- கமக்கார அமைப்பு

20200820 122445
20200820 122445

யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை என யாழ் மாவட்ட கமக்கார அமைப்பு அதிகார சபையின் செயலாளர் எஸ். செல்வரத்தினம் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை. அதேபோல உற்பத்திக்கு செலவு செய்யும் பணத்தை அவர்கள் விளைச்சலின் போது பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்த விடயத்தினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் எடுக்க வேண்டும். அதேபோல் விவசாயம் என்பது பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பு இவை இணைந்த ஒன்று.

கால்நடைகளை பொருத்தவரைக்கும் கால்நடைகளுக்குரிய தீவனங்கள் பெறுவதில் சில இடர்பாடுகள் காணப்படுகின்றன. அதனை விவசாயிகள் தமது இடங்களில் பெற்றுக் கொள்வதற்குரிய ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல் தீவனங்களை தவிர்த்து புல் வளர்ப்பு போன்ற செயற்திட்டங்களை கருத்தில் எடுப்பது மிகவும் சிறந்தது.

கோழி வளர்ப்புக்குரிய கோழிக்குஞ்சுகள் பெற்றுக் கொள்வதிலும் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர் நோக்குகின்றார்கள். தற்போது கோழி வளர்ப்பாளர்கள் அச்சுவேலியில் உள்ள பண்ணை ஒன்றிலேயே கோழிக்குஞ்சுகளை பெற்றுக்கொள்ளக் கூடிய நிலைமை காணப்படுகின்றது

பால் உற்பத்தியை எடுத்துக்கொண்டால் கால்நடைகளுக்கான மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர் நோக்குகின்றார்கள்.

இந்த விடயம் தொடர்பில் விவசாய அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து உரிய நடவடிக்கை எடுப்பார்களேயானால் விவசாயிகள் கால்நடை வளர்ப்பினை சிறப்பாக மேற்கொள்ள முடியும் .

குறிப்பாக தற்போது நாட்டில் ஏற்பட்ட கொரோணா இடர்காலகால சூழ்நிலை காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த புதிய அரசாங்கம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால்தான் வடக்கில் விவசாயத்தினை மேலும் விருத்தி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.