2 நாட்களில் மட்டும் 131 கோடி செலவு!!

gota anura sajith
gota anura sajith

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களின் செலவீனங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய 3 பிரதான கட்சிகள் உட்பட 5 கட்சிகளின் கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் நவம்பர் 10 ஆம் திகதி வரையான செலவீனங்களை அந்த நிலையம் வெளியிட்டது.

அதன்படி கடந்த 9 ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இரண்டு நாட்களில் மட்டும் ஜனாதிபதி வேட்பாளர்கள் 1313 மில்லியன் ரூபாயை பிரசாரங்களுக்காக பயன்படுத்தியுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பாக இதுவரையில் 1518 மில்லியன் ரூபாய் (151கோடி) இந்த காலப் பகுதிக்குள் மாத்திரம் செலவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேபோன்று சஜித் பிரேமதாச போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி சார்பாக இதுவரையில் 1422 மில்லியன் ரூபாய் (142கோடி) குறித்த காலப் பகுதியில் மாத்திரம் செலவிட்டுள்ளதாக அந்த நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க சார்பாக இந்த காலப் பகுதியில் 160 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் புதிய ஜனநாயக முன்னணி ஆகியன ஒளிபரப்பு ஊடகத்திற்காகவே அதிகளவிலான செலவீனங்களை மேற்கொண்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களில் செலவினங்கள் தொடர்பான வரையறையொன்றை வைக்க வேண்டிய வகையில் சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.