தை பிறந்தால் கூட்டணி பிறக்கும்!

ulloor arasiyal 3
ulloor arasiyal 3

பழம்பெரும் கட்சிகளே தேர்தல் ஆரவாரத்தை ஆரம்பித்து விட்ட நிலையில் புதிய கட்சி, புதிய கூட்டணி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணி என்று கருத்துரைக்கப்படும் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி சத்தம் சந்தடியின்றியே இருக்கிறது. அவர்களின் இந்த மௌனத்தின் அர்த்தம் என்ன என்பது பலருக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

இது குறித்து விசாரித்ததில் புலி பதுங்குவது பாய்வதற்கு என்பதுபோல, வடக்கு முன்னாள் முதலமைச்சரும், கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் நாளுக்கு நாள் உற்சாகமாக கூட்டுச் சேரும் கட்சிகளுடன் கலந்துரையாடி வருகிறாராம்.

கூட்டணி என்றால் இப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக சில வரைபுகளை – கூட்டணிக்கான யாப்பை பங்காளிகளுடன் இணைந்து தயாரித்து விட்டார் என்கின்றன உள்வீட்டுத் தகவல்கள்.

அதுமட்டுமின்றி கூட்டணியைப் பதிவதற்கும் சின்னத்தைப் பெறுவதற்கான பணிகளும் முழுமூச்சாக கூட்டணி கட்சிகள் செய்கின்றனவாம். எப்படியும் ஜனவரி மாதம் கூட்டணி பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கின்றன பங்காளித் தரப்புக்கள். அது வெளியாகும் நாள் அனேகமாக ஜனவரி முதலாம் திகதி அல்லது தமிழர் திருநாளாக இருக்கலாம் என்றும் அந்தத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

அது சரி எல்லாமே தயார் என்றால் ஏன் இத்தனை மௌனம் சாதிக்கிறார்கள் என்கிறீர்களா? மாற்று அணியினர் எல்லாம் தயார் என்றாலும், குழிபறிக்கச் சிலரும் காத்திருக்கின்றனராம். எங்கே முன்னரே சில விடயங்கள் கசிந்தால் எக்குத்தப்பாக மாறிவிடுமோ என்பதால்தான் பலத்த அமைதியாம்…!