இலங்கையில் தமிழர்களுக்கு பூர்வீக பிரதேசம் ஒன்று இல்லை!: எல்லாவல மேதானந்த தேரர்

therar
therar

இலங்கையில் தமிழர்களுக்கான பூர்வீக பிரதேசம் எங்குள்ளது? பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலைப்பாட்டையே அவர்கள் பிரதிபலிக்கின்றனர். பிரபாகரனே வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்று பிரகடனம் செய்தார் என கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழர்களுக்கான பூர்வீக பிரதேசம் எங்குள்ளது. இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சமத்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறிருக்கையில் தமிழர்களுக்கு என்று விசேடமாக பூர்வ பிரதேசமென்ற ஒன்று இல்லை.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தினை எடுத்துக்கொண்டால் அது தமிழர்களின் பூர்வீக பிரதேசமாக கொள்ளமுடியாது. கிழக்கிலங்கையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொல்பொருள் இடங்கள் காணப்படுகின்றன.

அவை அனைத்தும் பௌத்த, சிங்கள வரலாற்றுத் தொன்மங்களாகவே காணப்படுகின்றன. அங்கு தமிழர்களுக்கான பூர்வீக பகுதி எங்குள்ளது. சிங்களவர்களுடன் தமிழர்கள் வாழ்வதற்கு எங்குமே தடை செய்யப்படவில்லை.

மேலும் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சிங்கள பெரும்பான்மையின படையினராலேயே பாதுகாக்கப்பட்டார்கள். கடந்த காலத்தில் தமிழர்களின் போராட்டக் குழுக்கள் அரங்கேற்றி படுகொலைகளை மறந்துவிடவேண்டாம்.

அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தவர்கள் சிங்களப்படையினர்களே. ஆகவே இலங்கையில் தமிழர்களுக்கென்று இல்லாத பூர்வீக பிரதேசத்தை இருக்கின்றது என்று கூறி இனவாதத்தினையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்க முயலவேண்டாம்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் தமிழ் மக்களுக்கு எள்ளளவும் அநீதி இழைக்கப்படவில்லை. அவ்வாறான தலைவர்கள் ஆட்சியில் இருக்கின்றபோது அவர்களுடன் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் சார்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. அதற்கு யாரும் தடைகளை விதிக்கவும் முடியாது.

கூட்டமைப்பு போன்ற தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களை தவறாக வழிநடத்துகின்றார்கள். இந்த நாட்டில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அசாதாரண சூழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் தென்னிலங்கைக்கு நிகராக வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்வதில் மத்திய அரசாங்கம் பல்வேறு பணிகளை முன்னெடுத்தள்ளது. அவ்வாறிருக்கையில் அதிகாரப்பகிர்வின் அவசியம் என்ன?

சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட உள்நோக்கத்திலேயே அதிகாரப் பகிர்வினை தமிழ்த் தலைவர்கள் கோருகின்றார்கள். மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் இருப்பதிலுள்ள பிரச்சினைகள் என்ன? மத்திய அரசாங்கம் பாரபட்சமின்றி செயற்படுகின்ற நிலையில் அதிகாரப்பகிர்வு யாருக்கு தேவையாகவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.