கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவி!- உறவுகள் தெரிவிப்பு

Missing Persons Relations
Missing Persons Relations

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும் என வவுனியாவில் சுழற்சிமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கடந்த ஆயிரத்து 236ஆவது நாளாக போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்த போராட்டத்தைத் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டனர்.

அவர்கள் கூறுகையில், “புதிய அரசியல் சாசனத்தை, அதாவது அடிமை சாசனத்தை கொண்டு வருவதற்காகவே தமிழர்களை பலவீனப்படுத்தி அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கொழும்பின் நிகழ்ச்சி நிரலை சிந்திக்கவிடாமல் தமிழ் வாக்காளர்களை அடிமையாக வைத்திருந்ததாக கூட்டமைப்பு பெருமை கொள்கின்றது.

தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலையை நிராகரித்த சம்பந்தன், சுமந்திரன் குழுவினர்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள்.

கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும். இதை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தனர்.