தமிழ் தலைவர்கள் கொழும்பில் சொகுசாக உள்ளனர்! தமிழ் மக்களுக்கு தீர்வைக் கொடுங்கள்!!

Gnanasara Thero
Gnanasara Thero

தேர்தல் காலங்களில் 13 ஆவது திருத்தம் குறித்து கதைப்பது வழமையாகிவிட்டபோதும் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை இதுவரையில் சிங்கள தலைவர்களே நிர்வகித்துவந்தபோதும் அவர்களுடன் கூட்டணி வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை காண்பதற்கான வாய்ப்பை தமிழ்த் தலைவர்கள் தவறவிட்டனர் என்றும் எனவே, இந்த நிலைமைக்கு சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, 13 அல்லது 13 பிளஸ் என்பதெல்லாம் முக்கியம் அல்ல என குறிப்பிட்ட அவர் தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கான பேச்சுக்களை ஆரம்பித்து, இதோ, இந்தத் தீர்வைத்தான் எம்மால் வழங்க முடியும் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிர்வாகத்தை வழங்குவதா, அதிகாரங்களைப் பகிர்வதா என்பது பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் எத்தனை வருடங்கள் இதற்கான பேச்சுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன என கேள்வியெழுப்பிய அவர், இதனால் சாதாரண தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர் என கூறினார்.

அதிகாரத்தைக் கோரும் தமிழ் அரசியல்வாதிகளோ, கொழும்பு வந்துசென்று சொகுசாக வாழ்கின்றனர் என்றும் எனவே, சாதாரண மக்கள் பக்கம் நின்றே இந்தப் பிரச்சினைக்கான தீர்வை காணவேண்டும் என்றும் குறிப்பிட்ட ஞானசார தேரர்இதற்காக நாமும் குரல் எழுப்புவோம் என்றும் குறிப்பிட்டார்.