சகல பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் 1000 ரூபா நாட் சம்பளம் கட்டாயம் வேண்டும்; தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்து!

625.500.560.350.160.300.053.800.900.160.90 77
625.500.560.350.160.300.053.800.900.160.90 77

“அனைத்துப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஆயிரம் ரூபா நாட் சம்பளம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை அரசு கட்டாயம் நிறைவேற்றவேண்டும்.” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாட் சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முன்மொழிவைப் பிரதமரும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ச வரவு – செலவுத்திட்ட உரை ஊடாக முன்வைத்தார். ஆனாலும், அதற்காக ‘பட்ஜட்’டில் ஒரு சதம் கூட ஒதுக்கப்படவில்லை.

2021 ஜனவரி முதல் கொடுப்பனவு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. அந்த உறுதிமொழி கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் கம்பனி வழங்கவில்லை, அவர்கள் தரவில்லை, இவர்கள் இணங்கவில்லை எனக் கதை கூறக்கூடாது. கம்பனிகள் தர மறுத்தால் தோட்டங்களை அரசு சுவீகரிக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நிதி ஒதுக்கி தாம் அதனை வழங்க வேண்டும்.

ஆயிரம் ரூபா என்பது ஐந்து வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். எனவே, தற்போது 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும். ஆனாலும், ஆயிரத்தை ஏற்கின்றோம். அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” – என்றார்.