மக்கள் பிரதிநிதிகளைப் புறந்தள்ளி அபிவிருத்திக் கூட்டங்களை நடத்துவது அடாவடித்தனமானது-நா. உ கோவிந்தன் கருணாகரம்!

DSC04588 720x450 1
DSC04588 720x450 1

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குறித்தான கலந்துரையாடல்கள், திட்டமிடல்கள் எப்போதும் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்ததாக அமைந்திருக்க வேண்டும். அதனைவிடுத்து ஒரு தலைப்பட்சமான முடிவெடுப்புகளாக, நிகழ்ச்சி நிரல்களாக நடைபெறுவது கண்டிக்கத்தக்கதும் மாற்றியமைக்கப்படப்பட வேண்டியது என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)  தெரிவித்தார்


தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பெறுத்தவரையில் அண்மைய நாட்களில் விவசாயம் தொடர்பாகவும் கல்வி தொடர்பாகவும் பொருளாதார விடயங்கள் சம்பந்தமாகவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் சில கூட்டங்கள், கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இவை முறைப்படியானதாக நடைபெற்றிருக்கவில்லை. இது நடைமுறைகளை மீறும் செயலாகவே எம்மால் பார்க்கப்படுகிறது.


அதே போன்றே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் மாவட்டம் சார்ந்த விடயங்கள் தொடர்பான கூட்டங்களை, கலந்துரையாடல்களை தனிப்பட்ட முறையில் மாவட்ட செயலகத்தில் நடத்துவது தவறானதாகும். கூட்டங்களை நடத்தும்போது மக்கள் பிரதிநிதிகளையும், திணைக்களத் தலைவர்களையும் அழைத்தே கூட்டங்களை நடத்தவேண்டும். அதற்கு தற்போதைய கொரோனாவை காரணமாகச் சொல்ல முயலக் கூடாது.

  
தனிப்பட்ட அரசியல் நடத்துவதற்கான கூட்டங்களை தங்களுடைய அலுவலகங்களில் நடத்துவதனை விடுத்து அதற்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தினைப் பயன்படுத்துவதனைத் தவிர்த்துக் கொள்வது நல்லதாகும். அதிகாரத்தினை தவறாகப் பயன்படுத்துவது அடாவடித்தனமானதாகவே கொள்ளப்படும்.


மாவட்ட அபிவிருத்திக் குழுவில் பேசப்படுகின்றமை போன்று மாவட்டத்தின் நிலைமைகள், செயற்பாடுகள், அபிவிருத்திகள் குறித்தான கலந்துரையாடல்கள் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பினரையும் இணைத்ததாகவே நடத்தப்பட வேண்டும். எதேச்சாதிகாரமானதாக அல்ல.

நாட்டில் இருக்கின்ற அரசாங்கமானது ஆளும் தரப்பு எதிர்த்தரப்பினரை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. அதே போன்று நாடாளுமன்றத்திலும் எதிர்த்தரப்பினரைத் தவிர்த்து எந்தவொரு விடயமோ, பிரேரணையோ முன் நகர்த்தப்படுவதில்லை. அது அரசியல் பாரம்பரியமுமாகும். அதே போன்றே மாவட்ட, மாகாணங்களுமாகும்.


இந்த நிலையில் மட்டக்களப்பில் மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல், அழைப்பும் விடுக்காமல் மாவட்டத்தின் கல்வி சார், விவசாயம் சார், பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதும் தீர்மானங்களை ஏற்படுத்திக் கொள்வதும் ஆரோக்கியமானதல்ல என்பதனை மாவட்ட அரச நிருவாகமும், மாவட்ட அபிவிருத்திக் குழுவும் புரிந்து கொள்ள வேண்டும்.


தனிப்பட்ட அரசியல்களை நடத்துவதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுவினையோ, மாவட்ட செயலகத்தினையோ பயன்படுத்துவது நாகரிகமல்ல. மாவட்ட அபிவிருத்தியானது கட்சி நடத்துவததோ, இயக்கம் நடத்துவதோ அல்ல. அது மக்கள் நலன் சார்ந்த விடயமாகும். அனைத்து மக்களுக்குமானதாக, அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்ததாக இருக்க வேண்டியது. தனிப்பட்ட ஒரு சில தரப்பினரின் பிரதிபலன்களை எதிர்பார்த்து மாவட்டத்தினைப் பொதுமைப்படுத்திய கூட்டங்கள், கலந்துரையாடல்கள் நடத்தப்படுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றலின்றி ஆளும் தரப்பினர் மாத்திரம் நடத்துவதாக இருந்தால் அவற்றுக்கு தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் என்றே பெயர் இருக்கிறது. எனவே நாடாளுமன்றஅரசியல் பாரம்பரியங்கள், அரசியல் பாரம்பரியங்களுக்கு ஏற்ற வகையில்  மதிப்பளித்து மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றல்களை உறுதிப்படுத்திக் கொள்வதே சிறப்பாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.