இலங்கை மீது புதிய பிரேரணை வந்தால் தோற்கடித்தே தீருவோம் – அமைச்சர் தினேஷ் திட்டவட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசு கடந்த வருடம் விலகிவிட்டது. இந்தநிலையில், எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் போர்க்குற்றங்கள் தொடர்பிலோ அல்லது சர்வதேச விசாரணை தொடர்பிலோ இலங்கை அரசு அலட்டிக்கொள்ளாது. புதிய பிரேரணை எம் மீது திணிக்கப்பட்டால் அதையும் எதிர்கொண்டு வலுவிழக்கச் செய்ய நாம் தயாராக இருக்கின்றோம்.என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

உங்கள் படைகள் போர்க்குற்றம் ஏதும் இழக்கவில்லை என்று நீங்கள் கூறுவது உண்மை என்றால், சர்வதேச விசாரணைகளைக் கண்டு அஞ்சுவது ஏன்?’ என்று இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்துரைக்கும்போதே தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எமது படையினர் உண்மையில் நல்லொழுக்கம் மிக்கவர்வர்கள். மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள். அவர்கள் தமது உயிர்களை அர்ப்பணித்து விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்த பல்லாயிரக்கணக்கானத் தமிழ் மக்களை மீட்டவர்கள். அப்படியானவர்கள் மீது போர்க்குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயமானது?

நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட எமது படையினர் ஒருபோதும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் நாம் பல தடவைகள் கூறி விட்டோம். இதைத் தமிழ் அரசியல்வாதிகள் உணர வேண்டும். சுயலாப அரசியல் நடத்தும் அவர்கள் தங்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

செய்யாத குற்றங்களுக்காக எமது படையினரின் தியாகங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று இந்தத் தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

உண்மையில் எமது படையினர் போர்க்குற்றங்கள் செய்திருந்தால் அதற்கான விசாரணையை நாம் உள்நாட்டில் நடத்தலாம் அல்லது சர்வதேசத்தில் கோரலாம். அப்படி எதுவும் இடம்பெறாத நிலையில் எதற்கு விசாரணையை நாம் நடத்த வேண்டும்? எதற்கு சர்வதேச விசாரணையை நாம் எதிர்கொள்ள வேண்டும்” – என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.