நீதி கோரல் விடையத்தில் எப்படி சுமந்திரனுடன் சிவகரன் கைகோர்த்தார்? வலித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வி

IMG 20210112 102652
IMG 20210112 102652

சுமந்திரனை அயோக்கியன் என்றும், சிங்களத்தின் எடுபிடி, கைக்கூலி, வழிப்போக்கன் என்றும் ஊடகங்களில் உரைத்த சிவகரன் நீதி கோரல் விடையத்தில் எப்படி சுமந்திரனுடன் கைகோர்த்தார்? என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்ளி எழுப்பியுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை தொடர்பில் பொதுசபையில் கையளிக்கப்பட்டு ஒரு வருட கால அவகாசத்துடன் கோரிக்கை முன் வைக்கப் போவதாக நாம் அறிந்தோம். அவ்வாறு ஒரு வருட கால அவகாசம் என்பது ஐக்கிய நாடுகள் பொதுசபைக்கு இதனை நடை முறைப்படுத்த வழங்கப்படுகிறதா ? அப்படி நடை பெறாத பட்சத்தில் மாற்று திட்டம் என்ன? என்கின்ற விடயங்கள் தொடர்பில் ஒரு தெளிவான விளக்கத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தர தவறி விட்டதாகவே நாம் பார்க்கிறோம்.

சுமந்திரனை அயோக்கியன் என்றும், சிங்களத்தின் எடுபிடி கைக்கூலி வழிப்போக்கன் என்றும் ஊடகங்களில் உரைத்த சிவகரன் நீதி கோரல் விடையத்தில் எப்படி சுமந்திரனுடன் கைகோர்த்தார் என்ற மர்மத்திற்கு விடை என்ன?

சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது போர் குற்றம் நடந்ததிற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. புலிகள் இன சுத்திகரிப்பு செய்தார்கள், புலிகள் பலவந்தமாக ஆழ்க்கடத்தல் செய்தார்கள் என பொய் உரைத்து ரணில், மைத்திரி அரசின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை சிங்கள பௌத்த பேரின வாதிகளை சர்வதேசத்தில் தப்ப வைத்த சுமந்திரனை சிவகரன் களம் இறக்கியதன் பின்னணியில் யார்?

சர்வதேச சமூகம் நீதியையும், பொறுப்புக்கூறலையும் நடைமுறைப்படுத்தும் வகையில், சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனவழிப்பு குற்றங்கள், போர்க்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடையங்களை சர்வதேச நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்துதல் அவசியமானதாகும்.

இவ்வாறான நிலைப்பாட்டில் நீதிப்பொறிமுறையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகவோ,அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றிற்கோ கொண்டு செல்வதற்கான பரிந்துரையாக அமைய வேண்டும்.

குற்றங்கள் இழைத்தவர்களை வலிந்து பதிலளிக்க கூடிய சிறப்பு விசாரணைப் பொறிமுறையொன்று உருவாக்கப்படல் வேண்டும்.அப்பொறிமுறையானது மியன்மார் விடயங்களை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட மியன்மாருக்கான சர்வதேச புலனாய்வு விசாரணைப் பொறிமுறை ஒத்ததாகவோ,அல்லது சிரியா விவகாரங்களை கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட சர்வதேச சிறப்பு புலனாய்வு விசாரணைப் பொறிமுறையாக அமைய வேண்டும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் என ஏன் இரண்டு நீதிமன்றங்கள் உள்ளன? தமிழர்கள் இந்த இரண்டு நீதிமன்றங்களையும் நோக்கி வேலை செய்ய வேண்டுமா என்ற வினாக்களுக்கு விடை என்ன?

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 1998-ல் ரோம் சாசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இது ரோம் சாசனத்தில் பட்டியலிடப்பட்ட சர்வதேச சட்டமீறல்கள் குறித்து தனி நபர்கள் மீது இனப்படுகொலை உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரித்து தண்டனை வழங்க முடியும். ஆனால் ரோம் சாசனத்தில் கையொப்பமிட்டு, உறுதிப்படுத்தபட்ட நாடுகள் மீது மாத்திரமே அதற்கு அதிகாரம் உண்டு. இலங்கை இந்த ரோம் சாசனத்தில் கையொப்பமிடாத ஒரு நாடு என்ற காரணத்தாலேயே தமிழர்களால் இன்று வரை எதுவும் செய்ய முடியவில்லை என்பதே ஒரு கசப்பான விடயமாகும்.

வேறு வழிகள் இல்லையா என பரிதவிக்கும் எம் உறவுகளுக்கு கடினமான மாற்று வழிகள் உள்ளன என்பது ஆறுதலை தந்தாலும், அந்த வழிகளில் எமது முன்னேற்றம் எவ்வளவு தூரம் உள்ளது? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.