டிசம்பர் மாதத்துக்குள் புதிய அரசமைப்பு! – கல்வி அமைச்சர்

unnamed 12
unnamed 12

இவ்வருடம் டிசம்பர் மாதத்துக்குள் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேர்தல் மேடைகளில் அரசமைப்பு குறித்து நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துடன் நிறைவு பெறவில்லை. புதிய அரசமைப்புக்காகவே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை எமக்கு வழங்கியுள்ளார்கள்.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து புதிய அரசமைப்புக்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன.

புதிய அரசமைப்பு தொடர்பான 9 பேர் அடங்கிய உப குழுவினர் இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் அரசமைப்புக்கான மூலவரைபைச் சமர்ப்பிப்பார்கள்.

பின்னர் புதிய அரசமைப்பு குறித்து நாடாளுமன்றத் தெரிவுகுழு நியமிக்கப்படும். அக்குழுவில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களும் உள்ளடங்குவார்கள்.

புதிய அரசமைப்பு தொடர்பில் அரசியல் கட்சிகளின் யோசனைகளை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவினர் கோரியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் யோசனைகளை இவ்வாரம் கட்சியின் தவிசாளர் என்ற ரீதியில் சமர்ப்பிப்பேன். தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான யோசனையாகும்.

விருப்பு வாக்கு முறைமை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற தீர்மானத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த தன்மையில் உள்ளன.

ஆகவே, புதிய அரசமைப்பில் தேர்தல் முறைமை பிரதான அம்சமாகக் கருதப்படும். இவ்வருடம் டிசம்பர் மாதத்துக்குள் புதிய அரசமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.