உப்புமாவெளியில் சூறையாடப்படும் கடற்கரையோர மணல் திட்டுக்கள்;செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்!

VideoCapture 20210210 133108

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலகப்பிரவிற்குட்பட்ட, உடுப்புக்குளம், உப்புமாவெளிப் பகுதியில் கடற்கரையோர மணல் திட்டுக்கள் தொடர்ச்சியாக அகழப்படுவதால் வெள்ளப்பெருக்கு மற்றும், கடல் நீர் கரையோரப்பகுதிகளுக்குள் உட்புகும் அபாய நிலை காணப்படுவதுடன், மணல் ஏற்றிச் செல்லப்படும் வீதியும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே அப்பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வுச் செயற்பாட்டை நிறுத்த உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறிப்பாக அப்பகுதி மக்களின் நலன் கருதி குறித்த மணல் அகழ்வுச்செயற்பாட்டை உடனடியாக நிறுத்தவேண்டுமென கடந்த 26.01.2021அன்று இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் தொடர்ச்சியாக இந்த மணல் அகழ்வுச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறு தொடர்ந்தும் மணல் அகழ்வு இடம்பெறுவது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு மீண்டும் தெரியப்படுத்தியபோதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த மணல் அகழ்வு விவகாரத்தினை உடனடியாகத் தடுக்கும் வகையில் அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை செயற்படுத்துவதற்கான ஒழுங்குகளை உரியவர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

அதேவேளை அங்கு இடம்பெறும் மணல் அகழ்வுச்செயற்பாட்டால் உடுப்புக்குளம் நான்காம் கட்டை மயான வீதி பாதிக்கப்பட்டுள்ள நிலைமை தொடர்பாக 09.02.2021அன்று அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு அங்கு மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

குறிப்பாக அவ்வீதியால் உழவியந்திரத்தில் மணல் ஏற்றிவந்தவர் ஊடகவியலாளருடை அடையாள அட்டையை கேட்டு அச்சுறுத்தியுள்ளார். அதேவேளை ஊடகவியலாளரை வீடுயோ எடுத்ததுடன், ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிள் இலக்கமும் மணல் அகழ்பவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு ஊடகவியலாளரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.