முஸ்லிம்களை ஏமாற்றிய மஹிந்த! – ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இன்னமும் அனுமதி இல்லை என்கிறது பிரதமர் அலுவலகம்

unnamed 4
unnamed 4

ஜனாஸாக்கள் நல்லடக்கம் விடயத்தில் முஸ்லிம்களைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏமாற்றியுள்ளார் என்று புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்குப் பிரதமர் அனுமதி வழங்கியுள்ளார் என்று வெளியான செய்தி, முழுமையாகவே உண்மைக்குப் புறம்பானது எனப் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்று பத்திரிகைஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது குறித்து தம்மால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, பிரதமர் அலுவலகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரி இவ்வாறு பதிலளித்தார் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, “ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்” என்றே பிரதமர் பதிலளித்தார் எனவும் குறித்த அதிகாரி கூறினார்.

அதைவிடுத்து, கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் ஜனாஸாக்களை  அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனப் பிரதமர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கருத்து வெளியிடவில்லை எனப் பிரதமர் அலுவலகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரி பதிலளித்தார் என்றார் பத்திரிகை ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதமர் வெளியிட்ட கருத்தை அடுத்து, அரச தலைவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தமது வரவேற்பை வெளியிட்டு வந்த பின்னணியிலேயே, பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி மேற்படிக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்தே ஜனாஸாக்கள் நல்லடக்கம் விடயத்தில் முஸ்லிம்களைப் பிரதமர் ஏமாற்றியுள்ளார் என்று புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.