தமிழ் தலைமைகள் புதிய அரசியல் அமைப்பில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முன்வைக்கவேண்டும்- துரைரெத்தினம்

IMG 20200305 WA0006
IMG 20200305 WA0006

புதிய அரசியல் அமைப்புக்கான உத்தேச வரைபை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிற்கு முன் வைக்கப்படும் தமிழர்கள் தொடர்பான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தோடு, 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள கோரிக்கைகளை முன் வைப்பதன் ஊடாக தமிழ் மக்கள் நன்மை அடைவார்கள் எனவே தமிழ்த் தலைமைகள் இந்த விடயத்தை முன் வைக்குமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெத்தினம் ஊடக அறிக்கை ஒன்றை இன்று (25) வெளியிட்டுள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் மாறிமாறி பல தீர்வுத் திட்டத்தை முன் வைத்தாலும் புதிய அரசின் உத்தேச வரைபை தயாரிப்பதற்கான நியமிக்கப்பட்ட நிபுணர்குழு தீர்வுத்திட்டம் தொடர்பாக கட்சிகளிடம் ஆலோசனைகளை பெற்று வருகின்றது.

இவ்வேளையில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணைக் குழுவின் 46ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெறும் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக கவனயீர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வட கிழக்கிலுள்ள கட்சிகள், சிவில் அமைப்புக்கள், நிறுவனங்கள், மதச்சார்புள்ள, மதச்சார்பற்ற அமைப்புக்கள், சிறுபான்மை மக்கள் ஓன்று திரண்டு பொத்துவில் தொடக்கம், பொலிகண்டி வரை வெகுஜன ரீதியான ஒரு கவனயீர்ப்பை தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் அனைவரினதும் கவனத்திற்கு ஈர்க்க வைத்துள்ளது.

தீர்வுத்திட்டம் தொடர்பாகவும், ஐக்கியநாடுகள் மனிதஉரிமை ஆணைக் குழுவின் 46ஆவது கூட்டத் தொடர் விடயங்கள் தொடர்பாகவும் தமிழ்க் கட்சிகள் தங்களது செயற்பாடுகளை முடக்கியுள்ளது.

தமிழ்மக்களின் உரிமைகள், அபிலாசைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் பல விடயங்களை தமிழ்க் கட்சிகள் முன் வைத்து வருகின்றன. இத் தருணத்தில் நிரந்தர தீர்வுத் திட்டம் தொடர்பாக தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைப்பது சிறந்ததாகும்.

ஏனனில் இத் திட்டம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட்டு 30 வருடங்களாக மாகாணசபை முறமையின் கீழ் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இது அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் இலகுவாக அமுல்படுத்த முடியும். மத்தியஅரசாங்கம் இதிலுள்ள பல விடயங்களை மீளப் பெற்றுக் கொண்டாலும், இணக்கப்பாட்டுடனும், சட்டரீதியாகவும் அமுல்படுத்த முடியும்.

பெரும்பான்மையான கட்சிகள் இத்திட்டத்திலுள்ள நல்ல விடயங்களையும், குறைபாடுகளையும் முன் வைப்பது ஆரோக்கியமான விடயமே. பல கட்சிகள் முன்வைப்பதென்பது தற்காலிகமாக கையிலுள்ள விடயங்களை செயற்படுத்துவதற்கு சிறந்த வழியாகும்.

எனவே தமிழ்த் தலைமைகள் எந்தளவிற்கு தேசியரீதியாக தமிழர்கள் தொடர்பான விடயங்களை வலுவாக முன் வைப்பதைப் போல் 13அவது திருத்தச்சட்ட விடயங்களையும் முன் வைப்பது ஆரோக்கியமானதே. இத்திட்டத்தை முன் வைக்கும் பட்சத்தில் இந்திய அரசின் (பாரதநாட்டின்) வலுவான ஆதரவைப் பெற முடியும். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது