மொட்டு’வின் தலைமையை கோட்டாபயவுக்கு வழங்கவும் – வாசுதேவ வலியுறுத்து

நாணயக்கார

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசியல் கூட்டணியின் தலைமைப் பதவி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு, அப்பதவி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்டிருந்த கருத்து தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் விமலுக்கும், மொட்டுக் கட்சிக்காரர்களுக்குமிடையில் கடும் மோதலும் ஏற்பட்டது.

இவ்வாறானதொரு நிலையிலேயே ‘தலைமைத்துவம்’ குறித்து அமைச்சர் வாசுவும் தற்போது கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் சார்ந்த பொறுப்பொன்றையும் வகிக்க வேண்டும் என்பதே எமது கருத்து. அவரை நிர்வாக அதிகாரியாக மட்டும் ஒதுக்கிவைத்துவிட முடியாது. அவ்வாறு நடந்தால் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கான அரசியல் சக்தி அவருக்கு கிடைக்காமல் போகக்கூடும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவே எமது தேசியத் தலைவர். அவரை விடவும் எமக்குத் தலைவர் ஒருவர் கிடையாது. எனினும், கட்சித் தலைமைப் பதவியை கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கலாம். எமது கூட்டணியின் தலைமைப் பதவியையாவது அவருக்கு வழங்க முடியும் தெரிவித்துள்ளார்.