இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வு – செல்வம்

selvam addikalanathan mp 1
selvam addikalanathan mp 1

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும இடையில் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (13) காலை 9.30 முதல் சுமார் ஒரு மணி நேரம் இடம் பெற்ற விசேட சந்திப்பில் பல்வேறு முக்கிய விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற சந்திப்பில் பல்வேறு விடையங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளோம்.

குறிப்பாக பல்வேறுபட்ட அபிவிருத்தி விடையங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளோம். முக்கியமாக தலைமன்னார்,இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஏற்கனவே மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாக அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைக்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தலைமன்னார், இராமேஸ்வரம் கப்பல் சேவை வெகு விரைவில் இடம் பெறும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்தார்.

குறித்த சந்திப்பு மிக முக்கியமானதாக அமைந்திருந்தது.இந்தியாவை எமது மக்கள் கூடுதலாக பாதுகாப்பின் நிமித்தம் நேசிக்கின்ற ஒரு நிலை உள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் குறித்த சந்திப்பு ஆக்கபூர்வமாக இடம் பெற்றது. குறித்த சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் என அவர் மேலும் தெரிவித்தார்.