பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் யோகேஸ்வரன் சரீரப் பிணையில் விடுவிப்பு!

Screenshot 20210217 232526 2
Screenshot 20210217 232526 2

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இன்று புதன்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜராகி சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 2021.02.03ம் திகதி தொடக்கம் 2021.02.07ம் திகதி வரை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் நடாத்தப்பட்ட சாத்வீக பேரணியில் கலந்து கொண்டது சார்பாக திருக்கோவில் காவல்துறையினராலும், பொத்துவில் காவல்துறையினராலும் இரண்டு வழக்குகள் 2021.03.17ம் திகதி பொத்துவில் நீதவான் நீதிமன்றில் எனக்கு எதிராக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கான அழைப்பானை பொத்துவில் நீதிமன்றத்தால் வாழைச்சேனை காவல் நிலையம் ஊடாக 2021.03.16ம் திகதி அன்று மதியம் வழங்கப்பட்டது. இதனால் இன்று புதன்கிழமை நீதிமன்றில் நான் ஆஜரான நிலையில் எனது சார்பாக சட்டத்தரணி ஜெகநாதன் தலைமையிலான ஐந்து சட்டத்தரணிகள் வழக்கை பொறுப்பேற்று நடாத்தினர்.

காவல்துறையினரின் வாதம் பலமாக அமைந்ததால் இன்று திருக்கோவில் காவல்துறையினரால் நீதிமன்றில் கொண்டுவரப்பட்ட வழக்கிலிருந்து நான் நீக்கப்பட்டாலும் பொத்துவில் காவல்துறையினர் சார்பான வழக்கில் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளேன். அத்தோடு எனது அடுத்த வழக்கு எதிர்வரும் 2021.06.02ம் அன்று நீதிமன்றத்திற்கு வருகின்றது.

ஆனாலும் கடந்த 2021.03.12 அன்று திருக்கோவில் காவல்துறையினர் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான சாத்வீக பேரணியில் எனது வாகனத்தை நான் பயன்படுத்தியதாக குறிப்பிட்ட விசாரணைக்கான கடிதம் 2021.03.15ம் திகதி கிடைத்ததால் 2021.03.17ம் திகதி இன்று புதன்கிழமை திருக்கோவில் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை செங்கலடி செல்லம் தியேட்டர் உரிமையாளர் க.மோகன் இன்று அழைக்கப்பட்டிருந்தும் இரு பிரதேச காவல்துறையினரும் அவரது வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கோரியமையின் நிமித்தம் அவர் இவ்விரு வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.