வேலணை பிரதேச சபை அமர்வில் வர்த்தகர்கள் அழைக்கப்பட்ட நிலையில் அமைதியின்மை!

unnamed 65
unnamed 65

யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடாத்த வந்த வேலணை வங்களாவடி வர்த்தகர்களை சபை அமர்வு இடம்பெறும் மண்டபத்திற்கு அழைத்து கலந்துரையாடியிருந்த நிலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் நவசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலமையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போதே கவனயீர்ப்பு போராட்டம் நடத்த வந்த வர்த்தகர்களை அழைத்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது சபை அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு சபையில் அமைதியின்மை ஏற்றப்பட்ட அதேவேளை வர்தகர்களுக்கும் சபை உறுப்பினர்களுக்கும் இடையேயும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலுக்கு சென்ற பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தனர்.

உள்நாட்டு யுத்த காலத்திற்கு முன்னரும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் குறித்த வங்களாவடி கடைத் தொகுதியில் தாம் வியாபாரம் செய்து வருவதாகவும் தற்போது உலக வங்கி நிதி அனுசரணையுடன் மாடிக் கட்டிடம் கட்டுவதற்காக பிரதேச சபை தீர்மானம் எடுத்த நிலையில், குறித்த கடைத் தொகுதியில் 14 பேர் ஏற்கனவே கடைகள் நடத்தி வருவதுடன் தற்போது கட்டப்படும் கடைத் தொகுதி 7 பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என பிரதேச சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் பல காலமாக குறித்த பகுதியில் வியாபாரம் செய்து வரும் நமக்கு குறித்த பகுதியில் கடைகள் ஒதுக்கித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பிரதேச சபை திறந்த விலைமனு கோரல் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் இது தமக்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஆகையால் பிரதேச சபை தீர்மானிக்கின்ற விலைமனு கோரலை ஏற்று குறித்த கடை தொகுதியை நாம் நடத்திச் செல்வதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளோம்.

இவ்வாறான நிலையில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் உலக வங்கி திட்டத்தின் கடைத்தொகுதி கட்டுவதற்காக உடைப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்த நிலையில் தமக்கு அதில் கடைகள் வழங்கப்படுமா என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது.

ஆகவே எமக்கு குறித்த பகுதியில் வியாபாரம் செய்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை உரிய தரப்பினர் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகர குருமூர்த்தி இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்,

உலக வங்கியின் நிதி அனுசரணையில் கட்டப்படவிருக்கும் குறித்த கடைத் தொகுதியில் உரிமையாளர் அல்லாதவர்கள் வியாபாரம் செய்து வருவதாகவும் அது தொடர்பில் தாம் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் அபிப்பிராயங்களை கேட்டு கடைத்தொகுதி அமைப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 6 உறுப்பினர்களும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திர கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.