சட்ட திருத்தம் நிறைவேறினால் இரு மாதங்களுக்குள் மாகாண சபை தேர்தல்! – புஞ்சிஹேவா

6dea91aae0daa5f1071c98671b5078e6 XL
6dea91aae0daa5f1071c98671b5078e6 XL

நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இரு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்தி முடிக்க முடியுமா என எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய சட்டத்தின் பிரகாரமா அல்லது புதிய சட்டத்தின் பிரகாரமா நடத்துவது என்பது தொடர்பில் முடிவெடுத்து அதற்குத் தேவையான சட்ட திருத்தத்தை அரசு நாடாளுமன்றம் ஊடாக மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு மேற்கொண்ட பின்னர் சுகாதார வழிகாட்டல்களையும் கருத்தில்கொண்டு இரண்டு அல்லது இரண்டரை மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும். ஏற்கனவே ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்கள் என்பன சுகாதார வழிகாட்டல்களுக்கு மத்தியிலேயே நடைபெற்றுள்ளது. எனவே, தேர்தலை நடத்துவது சவாலாக அமையாது.

மாகாண சபை பொறிமுறை இயங்கினாலும் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லை. எனவே, மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவேண்டும். அதற்காகவே விரைவில் சட்டத்திருத்தத்தை செய்து தேர்தலை நடத்த வேண்டும் என்ற யோசனையை தேர்தல் ஆணைக்குழுவும் முன்வைத்துள்ளது என தெரிவித்துள்ளார் .