சர்வதேசத்துக்குப் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளது இலங்கை! – சபையில் சார்ள்ஸ் சுட்டிக்காட்டு

sarlsh
sarlsh

ஐ.நா. தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற வசனம் இல்லை என்றாலும் கூட இலங்கையில் 2009ஆம் ஆண்டும் அதற்கு முற்பட்ட காலங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் பொறுப்புக்கூறும் கடப்பாடு இலங்கை அரசுக்கு உள்ளது.என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

அவர் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

போர்க்காலத்திலும் அதனைத் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்ட நிலையில், இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுயமாக வாழ வேண்டும் என்பதற்காகவே நாம் சர்வதேச விசாரணைகளைக் கோருகின்றோம்.

இந்தத் தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற சொல் நீக்கப்பட்ட போதிலும், சர்வதேசத்துக்குப் பொறுப்புக்கூறும் கடப்பாடு உள்ளதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கை இன்று சீனாவின் மாநிலமாகவும், பங்களாதேஷத்திடம் கடன் கேட்கின்ற நிலையிலும் உள்ளதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது நாட்டை சோமாலியா போன்ற நிலைக்குக் கொண்டு செல்லும்.

தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் ஐ.நா. தீர்மானத்தில் இல்லாவிட்டாலும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் தீர்மானம் கொண்டுவந்த பிரிட்டனுக்கும், அதற்கு ஆதரவு வழங்கிய, நடுநிலை வகித்த நாடுகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றார்.