தமிழ் தலைமைகள் பின் வாங்க கூடாது- முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்!

r thurairatnam
r thurairatnam

இந்தியா 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு ஜ.நாவில் கோரிய விடயத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் விடயம் சர்வதேச ரீதியாக அங்கீகாரம் பெற்றுள்ளது எனவே தமிழ் தலைமைகள் இது தொடர்பாக பின் வாங்க கூடாது. என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (29) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக சுயாட்சி அதிகாரத்தை நோக்கிய தமிழர்களின் பயணத்தில் எவ்வித மாற்றங்களுமில்லை. ஆனால் மூன்றிற்கு இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட இலங்கை அரசு தமிழ் மக்களுக்கெதிராக பல விடயங்களில் சிங்கள மக்களும், பௌத்த மதமும் தான் இலங்கையில் ஆளுமை மிக்கவராக இருக்க வேண்டும் என்னும் தோற்றப் பாட்டுடன் ஜனாதிபதியும் பௌத்த மதகுருக்களும் நடந்து கொள்கின்ற நிலையில் சிறுபான்மையினருக்கு எதிராக ஒட்டுமொத்தமாக பல வழிகளிலும் திணிப்பை ஏற்படுத்தி வருவது நாம் அறிந்த உண்மையாகும்.

தமிழர்களும் இலங்கையின் பிரஜைகள். தமிழர்களாகிய நாங்களும் மத ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், அரசியல் உரிமைகள் தொடர்பாகவும் இலங்கையில் சிங்கள பௌத்த இனத்தைப் போல் சமஉரிமையுடன் வாழ இலங்கை அரசிடம் அங்கீகாரத்தை கேட்டு நிற்கின்றோம். இவைகள் மறுக்கப்படுகின்ற நிலையில் தமிழர்களுக்கும், சிங்கள ஆட்சியாளர்களுக்கும் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன. நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

ஜனாதிபதி தலைமையில் புதிய ஆட்சி வந்ததன் பிற்பாடு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மிகவும் நெருக்கடிக்குள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜெனிவாவின் இந்த கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில் அனைத்தையும் மறுத்து வருகின்ற சிங்கள அரசுக்கு ஜெனிவா தீர்மானம் ஊடாக தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகார விடயத்தில் இந்தியா 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியதென்பது தமிழ் மக்களின் அரசியல் அதிகாரப் பங்கீடு தொடர்பாக இந்தியா சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்ந்தது வரவேற்கத்தக்கது.

தமிழர்களின் அரிசியல் உரிமை தொடர்பான விடயத்தில் இந்தியா மௌனம் காட்டாமல் தெளிவானதொரு செய்தியை சொல்லியிருப்பதென்பது தமிழ் மக்கள் மத்தியில் இந்தியா தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பதின்மூன்று தேவையா இல்லையா? பதின்மூன்றை இல்லாமலாக்க வேண்டும் என இலங்கை ஆட்சியாளர்களின் அமைச்சர்கள் கூட அச்சுறுத்துவதைப் போல் நடந்து கொண்ட நிலையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், அரசியல் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகவும் ஜெனிவா கூட்டத் தொடரில் ஒரு வலுவான நிலைப்பாடு வந்தது என்பது ஒரு வகையில் தமிழர்களுக்கான நிம்மதி பெருமூச்சடைவதற்கு சாதகமாக அமைந்துள்ளது.

தமிழர்கள் எதிர் பார்த்ததும் கேட்டதும் பலவிடயங்களாக இருந்தாலும் தமிழர்களை திரும்பிப் பார்ப்பதற்கு எவரும் இல்லாத நிலையில் இந்த முடிவென்பது கனிசமான முன்னேற்றத்தைத் தந்துள்ளது.

இவ்விடயங்களை சாதகமாக வைத்துக் கொண்டு இவைகளை அமுல்படுத்துவதற்கும். எதிர்காலத் திட்டங்களை தெளிவாக கொண்டு செல்வதற்கும் தமிழ்த் தலைமைகள் பின் வாங்கிக் கொள்ளக் கூடாது. இவை அமுல்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.